சென்னை: Mysskin (மிஷ்கின்) லியோ படத்தின் செட்டில் நடந்துகொண்ட அனுபவம் குறித்து இயக்குநர் மிஷ்கின் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துவருகிறது. லியோவின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் இரண்டு மாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டன.
சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு இப்போது சென்னையிலேயே ஷூட்டிங்கை நடத்திவருகிறது. அதன்படி, முதலில் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த ஷூட்டிங் பிறகு பையனூரில் நடந்தது. இப்போது ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடந்துவருகிறது. இங்கு ஆக்ஷன் காட்சிகள், பாடல்கள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. அனேகமாக இன்னும் சில வாரங்களில் ஷூட்டிங் முடிந்துவிடும் என தெரிகிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
மிஷ்கின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் மிஷ்கின் அளித்த பேட்டியில் லியோ பட அனுபவம் மற்றும் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நாங்கள் இருவரும் சேர்ந்து யூத் படத்தில் வேலை செய்தபோதே விஜய் ஒரு டாப் லெவல் ஸ்டார். தற்போது அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.. லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள நான் சென்றபோது உணவக செட் போட்டிருந்தார்கள்.
மிஷ்கின் செய்த அலப்பறை: சேர்கள், மேஜைகள் நிறைய இருந்தன. அவற்றுக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தார் விஜய். என்னை பார்த்ததும் ஸ்மைல் செய்தார் நாற்காலிகள், மேஜைகள் நிறைய இருந்ததால் அவற்றை சுற்றிக் கொண்டு செல்ல விரும்பவில்லை. அதனால் சேர்களில் ஏறி சென்றேன். நான் அப்படி வருவதை பார்த்த விஜய் தன் இரண்டு கைகளையும் நீட்டி என்னை ஹக் செய்தார். அவர் ஒரு ஸ்டார் மாதிரி இல்லை, குழந்தை மாதிரி இருந்தார்” என்றார்.
மிஷ்கினின் அடுத்த படம்: மிஷ்கின் கடைசியாக ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கிறார். அதில் ஆண்ட்ரியா மட்டுமின்றி விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தில் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. சூழல் இப்படி இருக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு கதையை எழுதி இயக்குகிறார் மிஷ்கின். அது படமாக வருகிறதா இல்லை ஓடிடியில் வெப் தொடராக வருகிறதா என்பது குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.