சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 50 நாட்களை கடந்து நடந்து முடிந்து நிலையில், தற்போது சென்னையில் சூட்டிங் நடந்து வருகிறது.
சென்னையில் இன்னும் சில தினங்களில் பிரம்மாண்டமான பாடல் சூட்டிங் மற்றும் முன்னதாக அதற்கான ரிகர்சல் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஜய்யை பாராட்டிய மிஷ்கின : நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் லியோ படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தல் காஷ்மீரில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 50 நாட்களை கடந்து நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு சில தினங்கள் இடைவெளியில் சென்னையில் சூட்டிங்கை துவங்கி நடத்தி வருகிறது.
அடுத்தடுத்து விறுவிறுப்பான சூட்டிங்கை படக்குழு நடத்திவரும் நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் பிரம்மாண்டமான பாடல் சூட்டிங் மற்றும் அதற்கான ரிகர்சலை திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாடல் படத்தின் ஹைலைட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளதாகவும் லியோ மற்றும் பார்த்திபன் என இருவேறு கேரக்டரில் அவர் தோன்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
படத்தின் சூட்டிங் துவங்கியதிலிருந்து படத்தின் வீடியோக்கள், போஸ்டர்கள் என்று அடுத்தடுத்து படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகமாக உள்ளனர்.குறிப்பாக விஜய்யின் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. விஜய் மற்றும் த்ரிஷாவின் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இந்த ஜோடி 14 ஆண்டுகளை கடந்து தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளது.
இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக இணைந்துள்ளார். விஜய்யிடம் தான் அடி வாங்கியது குறித்தும் அவர் அப்டேட் தெரிவித்திருந்தார். அவரது போர்ஷன்கள் காஷ்மீரிலேயே நிறைவடைந்த நிலையில், சென்னை திரும்பிய அவர், அறிக்கை மூலம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பேட்டியொன்றில் பேசியுள்ள மிஷ்கின் நடிகர் விஜய் குழந்தை மாதிரி என்று தெரிவித்துள்ளார்.

அவர் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் டாப் ஸ்டாராக உள்ளார் என்றும் மிஷ்கின் கூறியுள்ளார். தான் லியோ படத்தின் முதல் நாள் சூட்டிங்கிற்காக சென்ற போது, ரெஸ்டாரெண்ட் செட் போடப்பட்டு, டேபிள், சேர் எல்லாம் போடப்பட்டிருந்ததாகவும் தான் ஒரு ஓரமாக நின்றுக் கொண்டிருந்த நிலையில், விஜய் தன்னை கட்டித் தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அவர் அப்போது ஸ்டாராக இல்லாமல் குழந்தை போல தென்பட்டதாகவும் மிஷ்கின் பாராட்டு தெரிவித்துள்ளார்.