போபால் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள், ‘சப்ளை’ செய்யும் கும்பலை வேட்டையாடும் வகையில், நாடு முழுதும் ஒன்பது மாநிலங்களில் உள்ள 324 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற பயங்கரவாதிகள், அங்கிருந்தபடியே இந்தியாவில் சமூக விரோத செயல்களை அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்தும், வெளிநாடுகளை சேர்ந்த சில பயங்கரவாத குழுக்கள் மற்றும் அவர்களது ஆதர வாளர்கள், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவது குறித்தும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு ஆதரவாக வட மாநிலங்களில் பல கும்பல்கள் செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.
இந்த கும்பல்கள், போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். பல்வேறு குற்றப்பின்னணி உள்ள 19 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கும்பலை வேட்டையாடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பஞ்சாப், புதுடில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் உள்ள 324 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
என்.ஐ.ஏ., 129 இடங்களிலும், பஞ்சாப் காவல்துறை 143 இடங்களிலும், ஹரியானா காவல்துறை 52 இடங்களிலும் சோதனை நடத்தியது. பல மணி நேரம் நீடித்த இந்த சோதனைகள் நேற்றிரவு முடிவுக்கு வந்தன.
‘ஆப்பரேஷன் துவஸ்த்’ எனப்படும் இந்த சோதனையில், கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள், தோட்டாக்கள், 60 மொபைல் போன்கள், 20 சிம் கார்டுகள், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு மெமரி கார்டு கள், நிதி பரிமாற்றம் குறித்த 75 ஆவணங்கள் மற்றும் 39.60 லட்சம் ரூபாய் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து என்.ஐ.ஏ., செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
வெளிநாடுகளில் மறைந்து வாழும் லாரன்ஸ் பிஷ்னோய், சேனு பெஹல்வான், தீபக் தீதர் போன்ற நம் நாட்டு முக்கிய பயங்கரவாதிகளின் தொடர்பை முறியடிக்கும் நோக்கில் பல இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனைகளின் போது பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் நிதி மற்றும் ஆதரவு உட்கட்டமைப்புகளை அகற்றுவது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்