ஜெனீவா : ”2023-2027 வரையிலான, அடுத்த ஐந்தாண்டுகள் அல்லது ஐந்தண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டு, உலக வெப்பநிலை அதிகரிக்க, 98 சதவீதம் வாய்ப்புள்ளது,” என, ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து, ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகளவில், 2015 முதல் 2022 வரையிலான, எட்டு ஆண்டுகள் மிகவும், வெப்பமான ஆண்டுகளாக இருந்தன. அதில், 2016ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்தது.
இதைவிட,காலநிலை மாற்றம் தீவிரமடைவது, பசிபிக் பெருங்கடலில், இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும், ‘எல்-நினோ’ நிகழ்வு, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் ஆகியவற்றால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம், ஓர் ஆண்டோ அல்லது ஐந்து ஆண்டுகாலமுமோ, அதிக வெப்பம் பதிவாக, 98 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
எனினும் இது, 2030-ம் ஆண்டுக்குள் உலக சராசரி வெப்பநிலையை, 1.5 டிகிரி செல்சியஸ் அளவுகோலுக்குள் கட்டுப்படுத்துவதற்கு போடப்பட்ட, 2015 பாரிஸ் உடன்படிக்கையை மீறும் வகையில் இருக்கும் எனக்கூறமுடியாது.
ஏற்கனவே, நடப்பாண்டு, எல்-நினோ நிகழ்வு, ஜூலை மாதம் உருவாக, 60 சதவீத வாய்ப்புகளும், செப்டம்பரில் உருவாக, 80 சதவீத வாய்ப்புகளும் இருக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்நிகழ்வால் அடுத்த ஆண்டு, உலக வெப்பநிலை அதி்கரிக்கும்..
இதனால், சர்வதேச அளவில் சுகாதாரம், உணவு பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படும் ; அதை, எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
கனடாவின் அலாஸ்கா, தென்னாப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளை தவிர, அனைத்து பகுதிகளிலும், இந்தாண்டு, 1991-2020ம் ஆண்டு வரை இருந்த, சராசரி வெப்பநிலையை விட அதிகரிக்கும்.
இவ்வாறு, அந்த அமைப்பு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்