அமராவதி: மாதம் ஒரு ரூபாய் ஊதியம் பெறும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அணிந்திருக்கும் காலணிகளின் விலை ரூ. 1,34,800. அவர் வைத்திருக்கும் பேனாவின் விலை ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல். அவர் அருந்தும் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.5,499 (ஒரு பாட்டில் 750 மி.லி கொள்ளளவில் மொத்தம் 45 பாட்டில்கள் கொண்ட பெட்டி) என தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் வெங்கடரமணா ரெட்டி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தற்போது ஆந்திராவில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அமராவதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் வெங்கடரமணா ரெட்டி செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதாவது: ஆந்திர முதல்வர் ஜெகன் தனது கட்சி சார்பில் நடத்தும் செய்தித் தாளில் சந்திரபாபு நாயுடுவை மிகவும் தரக்குறைவாக சித்தரித்து காட்டுகின்றனர்.
அவரை விமர்சனம் செய்வதே அந்த செய்தித்தாளின் வேலையாகி விட்டது. சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, அவர் குடிக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் ரூ.60. இது தேவையா? என ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்தார். ஆனால், ஒரு காலத்தில் ரப்பர் செருப்புகள் அணிந்து நடந்த ஜெகன்மோகன் ரெட்டி, தற்போது ரூ.1,34,800 மதிப்பிலான செருப்புகளையே அணிகிறார். இவை பிரான்ஸில் முதலை தோலில் செய்யப்பட்ட விலையுயர்ந்த காலணி ஆகும்.
அவர் உபயோகிக்கும் பேனாவின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகம். மேலும் அவர் அணியும் சட்டை, பேண்ட் என அனைத்தும் விலை அதிகம் உள்ள பிராண்டட் வகைகளை சேர்ந்தது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு 9 இடங்களில்பேலஸ்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல கோடிகள் மதிப்பு மிக்கவை. கடந்த 2004-ம் ஆண்டில் இவரது தந்தை முதல்வராக பதவியேற்றபோது, இவரின் சொத்து மதிப்பு ரூ.1.74 கோடி என தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டப்பட்டது.
ஆனால், 2009 தேர்தலின்போது ரூ.77.39 கோடியாகவும், 2011ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின் போது ரூ.445 கோடியாகவும் தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டப்பட்டது. வெறும் 2 ஆண்டுகளில் இத்தனை கோடி எப்படி வந்தது? ஏதாவது புதையல் கிடைத்ததா? அந்த ரகசியத்தை ஜெகன் கூற வேண்டும். இவ்வாறு வெங்கடரமணா குற்றம் சாட்டியுள்ளார்.