பிரிட்டனின் 147 வருட பாரம்பர்யமிக்க மற்றும் யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையே பிரிட்டன் அரசின் நாடாளுமன்றமாக இயங்கிவருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மறுசீரமைப்புப் பணிகளின் தாமதத்தினால், நாடாளுமன்றம் இடிந்துவிழும் ஆபத்திலிருப்பதாகப் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “நாடாளுமன்றத்தை மறுசீரமைப்பதை நீண்ட காலமாக தள்ளிப்போட்டுவருவதால் அதிகரிக்கும் அபாயமானது, நாடாளுமன்றம் இடிந்துவிழுமளவுக்கு அழிவை ஏற்படுத்தும். இதனை மேலும் மேலும் தாமதப்படுத்துவது மறுசீரமைப்புக்கான செலவை அதிகரிக்கச்செய்யும். மேலும் இது வரிசெலுத்துவோர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு இந்த வேலைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்தால் அந்தப் பணத்துக்கும் மதிப்பு இல்லை. நாடாளுமன்றத்தின் சின்ன சின்ன மறுசீரமைப்பு பணிகளுக்கே வாரத்துக்கு 20.5 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனாலும், நாடாளுமன்றத்தை முழுமையாக மறுசீரமைப்பதற்கான பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது. நாடாளுமன்றத்தை மறுசீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருமித்த முடிவெடுத்த பிறகும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இன்றுவரை கட்டடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைக் காட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் நிறைய கல்நார் இருக்கிறது. அதனை முழுமையாக அகற்றவதற்கே இரண்டரை ஆண்டுகளுக்கு 300 பேர் தேவைப்படலாம்” என்று கூறப்பட்டிருக்கிறது.
முன்னதாக மறுசீரமைப்புப் பணிக்காக 2020-ம் ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவதாக 2018-லேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒப்புக்கொண்டனர். ஆனால் ஒப்புக்கொள்ளாதவர்களால் இந்த முடிவு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இன்னொருபக்கம் நாடாளுமன்றத்தை மறுசீரமைக்கும் திட்டத்தை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட அமைப்பு கடந்த ஆண்டு அகற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் தீ விபத்துக்கான அபாயங்களும் இருப்பதாக ஒருபக்கம் கூறப்படுகிறது. 2016-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் இதுவரை 44 தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.