புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, விஸ்வநாதன் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ராவையும், மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதனையும் நியமிக்குமாறு கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றதை அடுத்து, இருவரும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி விஸ்வநாதன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த வியாழக்கிழமை பிறப்பித்தார். இதையடுத்து, இவர்களின் நியமனம் குறித்த உத்தரவை புதிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இருவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதன்மூலம், அனுமதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 34 நீதிபதிகளின் பணியிடங்கள் நிரம்பி உள்ளன.
அதேநேரத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் வி. ராமசுப்ரமணியன் ஆகியோர் அடுத்த மாதம் பணிஓய்வு பெற இருக்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமைதான் அவர்களின் கடைசி பணி நாளாக இருக்கும்.
இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள விஸ்வநாதன், வரும் 2030ம் ஆண்டில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் வாய்ப்பைப் பெற உள்ளார். இவருக்கு முன் தலைமை நீதிபதியாக ஜே.பி. பர்திவாலா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். அவரது ஓய்வை அடுத்து 2030ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி விஸ்வநாதன் தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.