நீலகிரி கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக, 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 125-வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஜான் சல்லிவனால் நவீன ஊட்டி நகரம் நிர்மாணிக்கப்பட்டதன் 200-வது ஆண்டை முன்னிட்டு, சல்லிவனின் பேத்திகளை சிறப்பு விருந்தினர்களாக லண்டனிலிருந்து அழைத்து வந்து, இந்த நிகழ்வில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஜான் சல்லிவனின் ஐந்தாம் தலைமுறை பேத்தியான ஓரியல் சல்லிவன், துவக்க விழாவில் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துகையில், “அற்புதமான இந்த ஊட்டியைக் கண்டறிந்து அழகிய நகரை உருவாக்கிய ஜான் சல்லிவனின் ஐந்தாம் தலைமுறை கொள்ளுப்பேத்தி என்பதில் பெருமை கொள்கிறேன். நீலகிரியின் முதல் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டலுக்கு எதிராகவும் இருந்திருக்கிறார்.
இந்தியாவை பிரிட்டிஷ் அடிமைப்படுத்தி வைத்திருந்ததற்கு எதிராக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்திருக்கிறார். இந்திய வளங்களை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் சுரண்டுவதை ‘கங்கை நதியில் உள்ள வளங்களை பஞ்சால் உறிஞ்சி தேம்ஸ் நதியில் பிழிந்து கொண்டிருக்கிறோம் ‘ என்ற புகழ்பெற்ற உதாரணத்தை கூறியிருக்கிறார். இவரது இந்த வாசகம் லண்டன் அருங்காட்சியகத்தில் சாட்சியாக இருக்கிறது. அதிகாரியான ஜான் சல்லிவன் நீதி, நேர்மை, நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை விரும்பினார்” என்றார்.