எமனாக மாறும் மொபைல்கள்.. சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து.. மளமளவென பரவிய தீ.. கேரளாவில் பகீர்

திருவனந்தபுரம்:
கேரளாவில் சட்டைப் பையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய சூழலில் செல்போன்கள் என்பது மனிதர்களிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மனிதர்களை உலக அளவிலேயே விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமாக ஸ்மார்ட்போன்கள் கருதப்பட்டாலும், இவற்றால் பல சமயங்களில் பெரிய அளவில் ஆபத்துகளும் ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பாக, தற்போது செல்போன்கள் வெடித்து சிதறி பலர் உயிரிழந்து வருகின்றனர். சார்ஜ் போட்டப்படியே செல்போனில் பேசுவது, கேம் விளையாடுவது, டூப்ளிக்கேட் சார்ஜரில் சார்ஜ் வைப்பது போன்ற காரணங்களால் பேட்டரி அதிக சூடாகி வெடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, சீனாவில் தயாரிக்கப்படும் சில தரமற்ற செல்போன்களும் வெடிப்பதாக கூறப்படுகின்றன.

கேரளாவில் கூட சில தினங்களுக்கு முன்பு செல்போன் வெடித்ததில் அதை வைத்து கேம் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி முகம் சிதைந்து உயிரிழந்தார். திருச்சூரில் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது. தற்போது அதே திருச்சூரில்தான் இதே போன்ற பயங்கர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மரோடிச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் இலியாஸ் (70). இவர் நேற்று மாலை அங்குள்ள டீக்கடையில் வழக்கம் போல அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது சட்டையின் முன் பாக்கெட்டில் இருந்த செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. செல்போன் வெடித்த அடுத்த நொடியே அவரது சட்டையில் தீ மளமளவென பரவியது.

இதனால் இலியாஸ் பயத்தில் அலறவே, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரது பையில் இருந்த செல்போனை தூக்கியெறிந்து தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் இலியாஸ் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. செல்போன்கள் அடிக்கடி வெடிக்கும் சம்பவங்கள் தற்போது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.