சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலைமையில் கழிவுநீர் மேலாண்மை ஒழுங்கு முறை மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7-ன்படி, எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9-ன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்ட விரோதமாக கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்றுபவர்களை முதன்முறை விதிமீறலுக்கு ரூ.25,000/- அபராதமும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ.50,000/- அபராதமும், தொடந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் / சாதனங்களும் கழிவுநீர் லாரிகளில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி. அப்பணியாளர் இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்தினை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
பகுதிப் பொறியாளர்கள், சட்ட விரோதமாக கழிவு நீரகற்றுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக துண்டு பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோக்கள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.