புதுடெல்லி: கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப் மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
இது, மசூதியின் வளாகச் சுவரில் அமைந்திருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அம்மனை வழிபட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் வாரணாசி சிவில் நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட கள ஆய்வில், அங்குள்ள ஒசுகானாவின் நடுவில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சிவலிங்கத்தின் பழமையை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற 5 இந்து பெண்கள் கோரிக்கை விடுத்தனர். மசூதிக்குள் இந்துக் கடவுளரின் மேலும் பல சிலைகள் இருப்பதாகவும் கூறினார்கள்.
ஆனால், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் கூறியது. இதனை எதிர்த்து அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினர். அலகாபாத் உயர் நீதிமன்ற கார்பன் டேட்டிங் நடத்த அனுமதியளித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மன், கேவி விஸ்வநாதன், அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிவலிங்கத்தின் பழமையை அறியும் வகையில் தொல்லியல் துறை கார்பன் டேட்டிங் நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.