கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி சசிகலா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் ஶ்ரீநிதி (12). இவர் ஒண்டிப்புதூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இப்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஶ்ரீநிதி மாயமானதாகக் கூறப்படுகிறது. சிறுமி மாயமானது தெரிந்ததும், அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காத நிலையில், சிறுமியின் பெற்றோர் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தச் சூழலில் மாணவி ஶ்ரீநிதியைக் காணவில்லை என்றும் அவரை கண்டுபிடிப்போர் தகவல் அளிக்கலாம் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், முதலில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
மேலும், அங்கே இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தினர். சிறுமி குறித்து தகவல் கிடைத்தால், போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், அந்த சிறுமியைப் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கண்டுபிடித்தனர்.
கிழக்கு அனைத்து மகளிர் போலீசார், இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து 6 தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில் சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை மீட்ட போலீசார், கோவை அழைத்து வந்தனர். வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர் புகார் அளித்து சில மணி நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு சிறுமியை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.