புதுடெல்லி: மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விவகாரத்தில் தன்னை அதே அமைப்பின் இணை இயக்குநர் சாதி ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021-ல், சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாயினர். மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆதாரம் இல்லை என்று விசாரணைக் குழு அறிக்கை அளித்ததையடுத்து, வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க அவர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததையடுத்து, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்துக்கு அவர் மாற்றப்பட்டார். தற்போது சமீர் வான்கடே மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், விசாரணையின் போது தன்னை மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் இணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் தன்னை சாதி ரீதியாக விமர்சித்ததாக கூறியுள்ளார். மேலும், ஆர்யன் கானை தப்ப வைப்பதற்காக ஞானேஸ்வர் தன்னை சிக்க வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தன் மீதான சாதி ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக ஞானேஸ்வர் மீது எஸ்சி-எஸ்டி நல ஆணையத்தில் புகார் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் தன்னை வழக்கில் சிக்க வைத்ததாகவும் சமீர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, 2017-21-ம் ஆண்டுக்குள் சமீர் வான்கடே குடும்பத்துடன் ஐந்து முறை பிரிட்டன், அயர்லாந்து, போர்ச்சுக்கல், மாலத்தீவுகளுக்கு சென்றுவந்திருக்கிறார். 2021-ம் ஆண்டு சமீர் வான்கடேயும், அவரின் நண்பர் ராஜனும் மாலத்தீவில் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கின்றனர். பிரிட்டனுக்கு 19 நாள்கள் குடும்பத்தோடு சென்று வந்திருக்கிறார். அதோடு ரோலக்ஸ் வாட்ச் வாங்கி விற்பனை செய்திருக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை சமீர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்தப் பணியில் சேர்வதற்கு முன்னரே தனக்கு மும்பையில் 4 வீடுகள் இருந்துள்ளதாகவும், தான் வேலை பார்ப்பது சம்பளத்துக்காக இல்லை, மன திருப்திக்காக என்றும் அவர் கூறியுள்ளார்.
“உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே ஆர்யன் கானை கைது செய்தேன். விசாரணையின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் நான் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். ஆனால், நான் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ளேன்” என்று விசாரணையில் சமீர் வான்கடே கூறியுள்ளார்.