ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தந்தையும் ஒரு முதலமைச்சர். அவரது பெயரிலேயே கட்சி தொடங்கி மாநில அளவில் நடைபயணம் மேற்கொண்டு அரசியல் புரட்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாக ஆட்சிக் கட்டிலை மக்கள் பரிசாக அளித்தனர்.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
தொடக்கத்தில் மக்கள் நலன் சார்ந்த ஜெகன் மோகன் அறிமுகம் செய்த பல்வேறு திட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. தற்போது மூன்று ஆண்டுகளான நிலையில் ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்த முயற்சித்து வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு
அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் கையிலெடுத்துள்ள விஷயம், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் காஸ்ட்லி அரசியல். மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ஆளுங்கட்சியினர் எப்படி தான் குறுகிய காலத்தில் இவ்வளவு சம்பாதிக்கிறார்களோ தெரியவில்லை.
சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ல் முதலமைச்சராக இருந்த போது ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 1.74 கோடி ரூபாய். 2009 தேர்தலின் போது ஜெகன் தாக்கல் செய்த வேட்புமனுவில் 77.39 கோடி ரூபாய் என சொத்து மதிப்பை குறிப்பிட்டிருந்தார். 2011 இடைத்தேர்தலின் போது தனது வேட்புமனுவில் 445 கோடி ரூபாய் என சொத்து மதிப்பை குறிப்பிட்டார்.
தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பா?
இவ்வளவு வேகமாக சொத்து மதிப்பு அதிகரிக்கிறது என்றால் ஏதாவது தங்கச் சுரங்கம் வைத்திருக்கிறார்களா? அதில் வைரங்கள் கிடைத்துள்ளவா? நான் சொல்வது எதுவுமே கற்பனை கதையல்ல. தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி அணியும் செருப்பின் விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய். ஜெகன் பயன்படுத்தும் Mont Blanc Company பேனாவின் விலை ஒரு லட்ச ரூபாய்.
ஆந்திராவின் நிலை
அவர் வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலின் விலை 5 ஆயிரத்து 499 ரூபாய் (750 மி.லி Mustard Company). 2019ஆம் ஆண்டு நிலவரப்படி முதலமைச்சரின் சொத்து மதிப்பு 510 கோடி ரூபாய். இவர் தான் நாட்டிலேயே பணக்கார முதலமைச்சர். இப்படியே போனால் மக்களின் நிலை தான் என்ன? எனக் கேள்வி எழுப்பினார். ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தெலுங்கு தேசம் கட்சி வைத்துள்ள குற்றச்சாட்டு பேசுபொருளாக மாறியுள்ளது.