\"சூடுபட்ட பூனை\".. பேசாமல் பிஜேபி தலைவராகிடலாம்.. நெஞ்சம் எல்லாம் வஞ்சம்.. ஆஹா, திமுக யாரை சொல்கிறது?

சென்னை: ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால், தனது பதவியைத் துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தின் பி.ஜே.பி. தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாகச் செயல்பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதியைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது என்று திமுக நாளேடு கடும் விமர்சனம் செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தை ஆளுநர் மாளிகை மூலம் ஊடகங்களுக்கும் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக் குறித்து கடுமையான விமர்சனங்களை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி முன்வைத்துள்ளது.

அலப்பறைகள்: அந்தவகையில், இன்று வெளியாகியுள்ள கட்டுரையில், “அரசியல் தெளிவு, வரலாறுகள் அறியாத ஒருவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு அவர் செய்யும் அலப்பறைகள் அளவு கடக்கின்றன! தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த வேதனையில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டுள்ள நிலையில் நமது ஆளுநர் ரவியும் தன் பங்குக்கு அந்தத் துயரச் சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார்!

ஆளுநர் விரிவான விளக்க அறிக்கை கேட்பதில் என்ன தவறு?- என்று ஒரு சிலர் கேட்கக்கூடும்! ஆளுநர் கேட்பதில் தவறு இல்லை; கேட்ட விதம்தான். அவர் எத்தகைய விஷமத்தனத்தோடு – விஷம் கக்கியுள்ளார் என்பதை வெளிப்படையாக்குகிறது!

நடந்தவை குறித்து முழு விவரங்களை அரசின் மூத்த அதிகாரியை தொலைபேசியிலோ, நேரிலோ அழைத்து அறிந்து கொள்ள ஆளுநரால் முடியும் என்றாலும், அப்படிச் செய்யாது, அதனை ஒரு அறிக்கையாக வெளியிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி, தான் ஏதோ பெரிய செயலைச் செய்துவிட்டதாக எண்ணும் சிறுபிள்ளைத்தனம் தான், ஆளுநரின் நெஞ்சம் எல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துகிறது!

விஷமத்தனம்: இந்தக் கேள்விகளை அரசிடம் எழுப்புமுன் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத் (2022), உத்தரப்பிரதேசம் (2019), மத்தியப் பிரதேசம் (2021) போன்ற பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷச் சாராயம் குடித்து பலியானார்களே; அப்போது அங்குள்ள ஆளுநர்கள் இப்படி விஷமத்தனத்தோடு ஆளும் பா.ஜ.க. அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா? என்பதையாவது கேட்டறிந்திருக்க வேண்டாமா?

சூடுபட்ட பூனை: சட்டப் பேரவையை விட்டு கருத்த முகத்தோடு ஓட்டமும் நடையும் என்பார்களே அதுபோல வெளியேறிய நிகழ்ச்சிகளை எல்லாம் அடிக்கடி ஆளுநர் ரவி மறந்து விடுகிறார். ஒருமுறை சூடுபட்ட பூனை கூட மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கும். ஆனால் ரவி. தான் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர்க்கும் காரியங்களில் ஈடுபடாது. எப்போதும் சிறு பிள்ளைத்தனத்தோடு செயல்பட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகிறார்!

DMKs Murasoli has criticized governor rn ravi, the governors heart is full of deceit

ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால், தனது பதவியைத் துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தின் பி.ஜே.பி. தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாகச் செயல்பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதியைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது!” என முரசொலி விமர்சித்துள்ளது.

கமலாலயம்: கடந்த சில மாதங்களாகவே, ஆளுநர் ரவியின் பேச்சினை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகிறது.. “ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது. கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்.. ஆளுநர் பணியை தவிர அனைத்து வேலைகளையும் ஆர்என் ரவி செய்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழும்நிலையில், முரசொலியின் இந்த கட்டுரை மிகுந்த கவனத்தை திருப்பி வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.