ஹிரோஷிமா,
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று (19-ந் தேதி) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாடு 21-ந் தேதி முடிகிறது.
இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 7 நாடுகளும் அழைப்பின்பேரில் கலந்து கொள்கின்றன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஹிரோஷிமா அருகே இவாகுனியில் உள்ள கடற்படை விமான தளத்தில் ஏர்போர்ஸ் 1 விமானத்தில் நேற்று போய்ச் சேர்ந்தார். பலத்த மழைக்கு மத்தியில் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் நேற்று காலையில் ஹிரோஷிமா போய்ச் சேர்ந்துள்ளார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் தலைவர்களும் குவிகின்றனர். இதன் காரணமாக ஹிரோஷிமா நகரம், பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்தித்துப் பேசினார். ‘ஜி-7’ உச்சிமாநாட்டின்போது, அணுசக்தி பெருக்கத்தின் அபாயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரச்சினை எழுப்பி விவாதிக்க வகை செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஹிரோஷிமா நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின்போது, 1945-ம் ஆண்டு அமெரிக்கா அணுக்குண்டு வீசியது. இதில் அந்த நகரின் பெரும்பகுதி அழிந்ததும், 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதும் சோக வரலாறு. அந்த நகரில் இந்த அணுக்குண்டு வீச்சு நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிற தலைவர்கள் சென்று நினைவஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.