புதுடெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மற்றும் மாட்டுவண்டிப் பந்தயங்களை தடையின்றி நடத்தும் வகையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. இதேபோல, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் எருமை மாடுகளை வைத்து நடத்தப்படும் கம்பாலா போட்டிகளையும், மாட்டுவண்டிப் பந்தயங்களையும் தடையின்றி நடத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இவற்றை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது.
இதில், தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், முகுல் ரோஹத்கி, ராகேஷ் திவேதி உள்ளிட்டோர் ஆஜராகி, “ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டுடன் தொடர்புடையது. மத ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. போட்டிகளின்போது, விதிமுறைகள் மீறப்படுவதில்லை. தமிழகத்தில் ஆண்டாண்டுகாலமாக சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வர வேண்டும்” என்று வாதிட்டனர்.
மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் அடையாளங்களில் ஒன்று. அதற்குத் தடை விதிக்க முடியாது” என்று வாதிட்டார்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
பீட்டா அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ஜல்லிக்கட்டு, கம்பாலா போட்டிகள் மற்றும் மாட்டுவண்டிப் பந்தயங்களின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், மனிதர்கள் உயிரிழப்பது தொடர்வதாகவும், அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளதாகவும் வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு, குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கியிருப்பது சட்டப்பூர்வமானது. மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுக்குப் பிறகுதான், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு, கம்பாலா, மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் கொண்டுவந்த சட்டத் திருத்தங்கள் செல்லும். இந்த விதிகள் கண்டிப்பான முறையில் அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.
சில புகைப்படங்களையும், உயிரிழப்புச் சம்பவங்களையும் முன்வைத்து, ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்ற முடிவுக்கு வரமுடியாது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது எவரும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை. அப்படியிருக்கும்போது, இந்த விளையாட்டை, கொடூர விளையாட்டு என்று கூறமுடியாது. குத்துச்சண்டை, வாள் சண்டை போட்டிகளிலும்கூட உயிரிழப்புகள் நேரிடுகின்றன. எனவே, ஜல்லிக்கட்டு, கம்பாலா, மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு தடை விதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.