ஜூன் மாதம் 15ஆம் திகதி 7800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும்.
மேலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் போன்ற அதிக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடத்துறைகளுக்கு, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தேசிய மற்றும் மாகாண ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் க.பொ.த உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் பங்குபற்றுதலுடன் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த புலமைப்பரிசில் திட்டம் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து 2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியர்களால் அகிம்சையின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் நினைவாக வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு, மகாத்மா காந்தி உதவித்தொகை என்று பெயரிடப்பட்டுள்ளது.