பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஜித்தேஷ் 28 பந்தில் 44 ஓட்டங்கள்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் தவான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரப்சிம்ரன் முதல் ஓவரிலேயே 2 ரன்னிலும், அடுத்து வந்த அதர்வா(19), தவான்(17), லிவிங்ஸ்டன்(9) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஆனால் சாம் கரண் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் 28 பந்தில் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து ஷாருக்கான் களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய இந்த இணையால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.
188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி துடுப்பாட்டம் செய்ய தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர்.
ஹெட்மேயர் 28 பந்துகளில் 46 ஓட்டங்கள்
இதில் ஜாஸ் பட்லர் ரன் ஏதுமின்றி அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலுடன் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் அணியின் ரன் வேகம் உயர்ந்தது.
இதில் ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 30 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்து கேட்ச் ஆகி வெளியேறினார். சஞ்சு சாம்சன்(2), ரியான் பராக்(20) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
மறுபுறம் அதிரடி காட்டிய ஹெட்மேயர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 28 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், துருவ் ஜுரெல் மற்றும் டிரெண்ட் போல்ட் களத்தில் இருந்தனர்.
ராகுல் சாஹர் 20-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த 2 பந்துகளில் தலா ஒரு ரன்னும் கிடைத்ததைத் தொடர்ந்து, 4-வது பந்தில் துருவ் ஜுரெல் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை நிறைவு செய்தார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.