புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மக்களின் நலன் கருதி தந்தையின் நினைவிடத்தை கடந்த 2019-ம் ஆண்டில் அகற்றினார். அந்த மாநில முதல்வரின் தன்னலமற்ற நடவடிக்கை இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஒடிசாவை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர் பிஜு பட்நாயக். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமானப் படை விமானியாக பணியாற்றிய அவர், முன்னாள் பிரதமர் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். அந்த கட்சி சார்பில் ஒடிசா முதல்வராக பிஜு பட்நாயக் பதவி வகித்தார்.
கடந்த 1969-ல் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸில் இருந்து வெளியேறி, உத்கல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் கடந்த 1977-ல் ஜனதா கட்சியில் இணைந்தார். அந்த கட்சி சார்பிலும் ஒடிசா முதல்வராகப் பதவி வகித்தார். கடந்த 1997 ஏப்ரல் 17-ம் தேதி பிஜு பட்நாயக் உயிரிழந்தார். ஒடிசாவின் புரி நகரில் உள்ள ஸ்வர்கத்வாரா (சொர்க்கம்) கடற்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அங்கு 600 சதுர அடியில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
பிஜு பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நவீன் பட்நாயக் கடந்த 1997 டிசம்பரில் பிஜு ஜனதா தளம் கட்சியை தொடங்கினார். கடந்த 2000 மார்ச் முதல் இப்போதுவரை ஒடிசா முதல்வராக அவர் பதவி வகித்து வருகிறார். அவரது தனிச் செயலாளராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியன் பணியாற்றி வருகிறார். கடந்த16-ம் தேதி துபாய் சென்ற பாண்டியன், அங்கு வாழும் ஒடிசா மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒடிசாவின் புரி நகரின் ஸ்வர்கத்வாரா கடற்கரை, புரி ஜெகநாதர் கோயிலில் இருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் உடல்களை தகனம் செய்தால் நேரடியாக சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என்பது ஐதீகம்.
இந்த தகன பூமியை மேம்படுத்த பிரம்மாண்ட திட்டம் வரையறுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மாதிரியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் நான் விளக்கி கூறினேன். தனது தந்தை பிஜு பட்நாயக்கின் நினைவிடம், திட்டத்துக்கு இடையூறாக இருப்பதை முதல்வர் கண்டறிந்தார். உடனடியாக தந்தை பிஜு பட்நாயக்கின் நினைவிடத்தை அங்கிருந்து அகற்ற முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களும் இதற்கு முழு ஆதரவு அளித்தனர்.
அப்போது முதல்வர் கூறும்போது, எனது தந்தை பிஜு பட்நாயக் மக்களின் மனங்களில் வாழ்கிறார். கல், செங்கல் கட்டிடத்தில் வாழவில்லை என்று விளக்கம் அளித்தார். பொதுமக்கள் மற்றும் கட்சியினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் அதிகாலை நேரத்தில் பிஜு பட்நாயக்கின் நினைவிடம் யாருக்கும் தெரியாமல் அகற்றப்பட்டது.
இவ்வாறு மூத்த ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியன் தெரிவித்தார்.
பிஜு ஜனதா தள கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து பிஜு ஜனதா தளத்தில் இணைந்த பியாரிமோகன் மகோபாத்ரா, முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக இருந்தார். கடந்த 2012 மே மாதம் முதல்வர் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பியாரிமோகன் கட்சி எம்எல்ஏக்களை இழுத்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டினார். இந்த சதியை முதல்வர் நவீன் பட்நாயக் முறியடித்தார்.
இதன்பிறகு மூத்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இப்போதைய சூழலில் பிஜு ஜனதா தளத்துக்கு பாஜக மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. எனினும் கடந்த 13 ஆண்டுகளாக கார்த்திகேயன் பாண்டியனின் ஆலோசனைகளால் ஒடிசா அரசு அமல்படுத்தும் நலத்திட்டங்கள் மக்களின் பேராதரவைப் பெற்று வருகின்றன. அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் பாண்டியனின் பங்களிப்பு இருக்கிறது. மக்களுக்காக தந்தையின் நினைவிடத்தையே அகற்றிய முதல்வர் நவீன் பட்நாயக்கின் தன்னலமற்ற நடவடிக்கைகள் மக்களின் ஆதரவை பெருகச் செய்கிறது.
இவ்வாறு பிஜு ஜனதா தளகட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.