திருமாவளவன்: எச்சரிக்கை.. ஜல்லிக்கட்டு போட்டிகள் சாதிய மோதல்களுக்கான களமா.?

ஜல்லிக்கட்டு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சனாதன சக்திகளின் சதி வேலைகளுக்கு மரண அடி

தலைவர்

தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதை வரவேற்கிறோம். விலங்குகள் உரிமை என்ற பெயரில் சனாதன சக்திகள் தமிழ்நாட்டுக்கு எதிராகச் செய்த சதி வேலைக்கு இந்தத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது.

“ஜல்லிக்கட்டு என்பது தமிழ்ப் பாரம்பரியத்தின் அங்கமல்ல; இது விலங்குகள் வதைத் தடுப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது; ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை; இந்த சட்டத்தின் விதிகளை சரியாக நடைமுறைப்படுத்த மாட்டார்கள்” என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி எப்படியாவது ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கிவிட வேண்டும் என்று சனாதன சக்திகள் முயற்சி செய்தனர். அவர்களது வாதங்களையெல்லாம் உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

‘இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது’ என்று உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டின் போது காளைகளுக்குத் துன்புறுத்தல் ஏதும் இருக்கக் கூடாது என்பதை இதற்கான விதிகள் உறுதி செய்துள்ளதாகவும், ஒரு சட்டத்துக்காக இயற்றப்படும் விதிகளும் அந்த சட்டத்தின் அங்கமாகவே கருதப்பட வேண்டும். எனவே, அந்த விதிகளை சட்டத்தின் பகுதியாகவே நாங்கள் பார்க்கிறோம் ‘ என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஒரு வழக்கம், ஒரு பண்பாட்டின் அங்கமாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் தகுதி நீதிமன்றத்துக்குக் கிடையாது. அதை மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமியற்றும் அவைகளான சட்டமன்றமும், நாடாளுமன்றமும்தான் முடிவு செய்ய முடியும். அப்படி சொல்லப்படுகிற பாரம்பரியம் அல்லது வழக்கம் என்பது சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்கிறதா அல்லது எதிராக இருக்கிறதா என்பதை மட்டும் தான் நீதிமன்றம் ஆராய முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கூற்று ஜல்லிக்கட்டு வழக்குக்கு மட்டுமின்றி பசுவின் மீது புனிதத்தைக் கற்பித்து பசு பாதுகாப்பு என்கிற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்பது தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்துள்ள வெற்றி! இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படும் போது அதில் சாதிய பாகுபாடு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும். அண்மைக்காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழ்வதைப் பார்க்கிறோம். இத்தகைய போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லா விட்டால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக மாறிவிடக் கூடிய ஆபத்து உள்ளது என்பதைத் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்’’ என தெரிவித்துள்ளர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.