அபுஜா,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் மத்திய பீடபூமி மாகாணம் மங்கு மாவட்டத்தில் பங்சாய் மற்றும் குபாட் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் இவர்களது கால்நடைகள் மேய்ந்தன. இதுகுறித்து அந்த நிலத்தின் உரிமையாளர்கள் கால்நடை மேய்ப்பவர்களிடம் தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் முற்றியதில் அது வன்முறையாக மாறியது. இதனையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது சிலர் துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் அங்கு சண்டையிட்டு கொண்டிருந்த பலர் தலைமறைவாகினர். இந்த கலவரத்தில் இரு தரப்பை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்த நிலையில் 5 பேர் கைதாகி உள்ளதாகவும், அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் கலவரத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக கலவரம் நடந்த மங்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.