தர்மசாலா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தர்மசாலாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட டெல்லி அணி முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்ததுடன் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்புக்கும் ஆப்பு வைத்தது.
இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 198 ரன்னில் அடங்கி 7-வது தோல்வி கண்டது. ஆட்டம் இழக்காமல் 82 ரன்கள் (37 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்த டெல்லி வீரர் ரிலீ ரோசவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் ‘பவர்பிளே’யில் (முதல் 6 ஓவர்களில்) நன்றாக பந்து வீசவில்லை (61 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை). ஆடுகளம் ‘ஸ்விங்’குக்கு கைகொடுத்த அந்த சமயத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க வேண்டும். எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான இடத்தில் துல்லியமாக பந்தை பிட்ச் செய்யவில்லை.
விக்கெட் வீழ்த்துகிறோமோ, இல்லையோ கட்டுகோப்பாக பந்து வீசி நெருக்கடி அளிக்க வேண்டியது முக்கியமானது. துரதிருஷ்டவசமாக எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படுத்த தவறிவிட்டனர். இந்த சீசனில் பல ஆட்டங்களில் நாங்கள் ‘பவர்பிளே’யில் துல்லியமாக பந்து வீசாததால் 50-60 ரன்கள் விட்டுக் கொடுப்பதுடன் விக்கெட்டும் வீழ்த்தவில்லை. இது எங்களுக்கு பாதகமாக இருந்து வருகிறது.
கடைசி ஓவரில் சுழற்பந்து வீச்சாளரை (ஹர்பிரீத் பிரார் இறுதி ஓவரில் 23 ரன் விட்டுக்கொடுத்தார்) பந்து வீச வாய்ப்பளித்த எனது முடிவு பாதிப்பை ஏற்படுத்தியது. முந்தைய ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் (நாதன் எலிஸ்) 18 ரன் வழங்கியதால் நான் இந்த முடிவை எடுக்க வேண்டியதானது. குறிப்பிட்ட அந்த 2 ஓவர்களில் வழங்கிய அதிக ரன்களும் எங்கள் தோல்விக்கு ஒரு காரணமாகும். கடைசி ஓவரில் நோ-பால் வீசப்பட்ட போது எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் நெருக்கமாக அமைந்த இந்த ஆட்டத்தில் எதிர்பார்த்த முடிவு எங்களுக்கு கிடைக்கவில்லை. லிவிங்ஸ்டன் (94 ரன்கள்) சிறப்பாக ஆடினார். இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.