புலித்தோல், யானைத்தந்தம் விற்பனை செய்ய முயன்றதாக 5 பேர் கைது – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி, அன்பில், துரைசாமி, ஆனந்தபிரகாஷ், அன்பரசன், மணிகண்டன் உள்ளிட்டோர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், ‘’நாங்கள் சட்டவிரோதமாக புலித்தோல், யானை தந்தம், மான் கொம்பு, நரி வால் உள்ளிட்டவை வைத்திருந்ததாக திருச்சி மாவட்ட வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றம் பிறபிக்கும் உத்தரவிற்கு நாங்கள் கட்டுப்படுவதாகவும், எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எ.எம்.தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஒரு புலித்தோல், 2 மான் கொம்புகள், ஒரு யானை தந்தம் மற்றும் நரி வால் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்து விட்டது.
அதுமட்டுமல்லாமல், மனுதாரர்கள் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. ஆகவே, மனுதாரர்கள் சிறையில் இருக்கும் காலத்தைக் கருத்தில் கொண்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது, சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது” உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.