சென்னை: பண மதிப்பிழப்பு சமானிய மக்களையும் விவசாயிகளையும் நடுத்தர மக்களையும் அதிகம் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். 5 வருடத்திற்கு ஒருமுறை பணம் செல்லாது என்று சொன்னால் பணத்தின் மீது யாருக்கு நம்பிக்கை வரும். நாட்டின் மீது யாருக்கு நம்பிக்கை இருக்கும் என்றும் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிக் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிக் கிளைகளில் ஒரு நேரத்தில் ரூ.20,000 வரை 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும், தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் கள்ள நோட்டு வைத்திருப்பவர்கள்தான் கவலைப்பட வேண்டும் என்று சிலர் கூறினாலும் தெரிந்தோ தெரியாமலோ வீட்டில் பணத்தை மறைத்து வைத்திருப்பவர்கள் மறந்து விட்டால் அந்த பணம் செல்லாமல் போய் விடுமே என்று கவலைப்படுகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஆனந்த் சீனிவாசன் அளித்த பேட்டியில், ஒரு விவசாயி அவருடைய வீட்டில் யாருக்கும் தெரியாமல் 2000 ரூபாய் நோட்டு வைத்திருக்கிறார். அவருக்கு பணம் திரும்ப பெறப்பட்ட விசயம் தெரியவில்லை என்றால் என்ன செய்வார். அவரிடம் போய் சொல்வது யார் பொறுப்பு.
போன முறை பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது பிரதமர் பேசினார். இந்த முறை பிரதமர் பேசினாரா? அல்லது நிதியமைச்சர் பேசினாரா? ரிசர்வ் வங்கி கவர்னர் கூட பேசவில்லையே. நாளைக்கு 500 ரூபாய் செல்லாது என்று சொல்வீர்கள். இது எங்க போய் முடியப்போகிறது. நாளைக்கு நாங்கள் கொடுத்த பாண்ட் செல்லாது என்று சொல்வீர்கள்.
கிரெடிட் கார்டில் செலவு செய்தால் 20 சதவிகித வரி போடுவதாக சொல்கிறீர்கள். ஏன் எல்லாத்தையும் மிடில் கிளாஸ் மேலேயே டார்கெட் பண்றீங்க. இதனால பொருளாதாரத்திற்கோ பணக்காரர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. சாமானியன் தன்னுடைய வீட்டில் 2000 ரூபாய் நோட்டு எங்கே இருக்கிறது என்று தெரியாமலேயே வைத்திருப்பார்கள். நிறைய பேருக்கு பணம் எங்கே இருக்கு என்றே தெரியாது. அவரது கையில் அக்டோபர் 1ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டு கிடைத்தால் அதை வங்கியில் மாற்ற முடியுமா?
50 வருடம் ஆனாலும் ரூபாய் நோட்டினை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். 5 வருடத்திற்கு ஒருமுறை பணம் செல்லாது என்று சொன்னால் பணத்தின் மீது யாருக்கு நம்பிக்கை வரும் நம்முடைய நாட்டின் மீதுதான் நம்பிக்கை வருமா என்று கேட்கிறார் ஆனந்த் சீனிவாசன்.
நாமே நம்முடைய பணத்தை நம்ப மாட்டோமே என்றும் கூறியுள்ளார். இது பண புழக்கத்தை பற்றிய பேச்சு இல்லை. எதுக்கு செய்கிறீர்கள். எதுக்கு 2000 ரூபாய் நோட்டை விட்டீர்கள்? இப்போது எதற்கு திரும்ப பெறுகிறீர்கள். செப்டம்பர் 30க்குள் ஏன் திரும்ப பெறுவதாக அறிவிக்கிறீர்கள்.
நாட்டில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் தெரியக்கூடாது என்பதற்காக தினம் ஒரு ஷாக் தருகிறீர்கள். எத்தனை பேருக்கு வேலையில்லை..எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள்? சிலிண்டர் 1200 ரூபாய்க்கு விற்பனையாகிறது பெட்ரோல் 102 பேருக்கு விற்பனையாகிறது. இதெல்லாம் தெரியக்கூடாது என்பதற்காக அவசரமாக ஸ்டெப் எடுக்கிறது மத்திய அரசு என்றும் கூறியுள்ளார்.