வழக்கமான வெயில் இல்லை இது! இயல்பை விட அதிகம்! மக்களே கவனமாக இருங்க! முதல்வர் ஸ்டாலின் தரும் அலர்ட்!

சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரித்துள்ளதால், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 19.5.2023 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர் பகுதியில் 41.8 டிகிரி சென்டிகிரேடும், கரூர்-பரமத்தி பகுதியில் 41.5 டிகிரி சென்டிகிரேடும் வெப்பம் பதிவாகியுள்ளது.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திறந்த இடங்களில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் தங்களது பணியை காலை முன்கூட்டியே தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன்னர் முடித்திடும் வகையில் உரிய ஏற்பாடுகளை தொடர்புடைய துறையின் அலுவலர்கள் செய்வதுடன், இப்பணியாளர்களுக்கு போதுமான குடிநீர், ஓ.ஆர்.எஸ். இருப்பு, நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போதுமான குடிநீர் வசதி, இளைப்பாறுவதற்கான நிழற்கூடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களும் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் அமர்ந்து வேலை செய்யும் வசதி மற்றும் கூடுதல் வெப்பம் உற்பத்தி ஆகும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான ஓய்வு வழங்கவும், அவசர கால உதவிக்காக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய சேவைக்கான முன்னேற்பாடுகளை உறுதி செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில், போதுமான அளவு ஓ.ஆர்.எஸ். இருப்பு வைப்பதுடன், வெப்ப அலையின் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான மருந்து இருப்பு வைக்கவும், கால்நடைகளுக்கு தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க போதுமான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள், முகாம்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும் விழிப்புணர்வில் அரசு தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.