கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வர மக்களால் முடியவில்லை. ஆனால் தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்தே செய்ய முடியும் பணிகளான ஐடி, அக்கவுன்ட்ஸ், டெலிகாலிங் போன்ற வேலைகளை தொழிலாளிகளை வீட்டிலிருந்துகொண்டு செய்யும் நடைமுறையை அமல்படுத்தின.
கொரோனா ஊரடங்கு முடிந்தும் பல நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை இன்றளவும் தொடர்கிறன்றன. சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் தன் பணியாளர்கள் அனைவரும் இனி வீட்டிலிருந்து வேலைப் பார்க்காமல் அலுவலகத்துக்கு நேரில் வந்து வேலை பார்க்க வேண்டும். வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை காட்டிலும் அலுவலகத்திலிருந்து வேலை பார்க்கும் போது உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பதில் உள்ள சவால்கள் என்ன என்பதை பணியாளர் ஒருவர் மற்றும் மனிதவள மேம்பாட்டாளரிடம் கேட்டறிந்தோம்.
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர், ”வீட்டிலிருந்து வேலை செய்வது மிகவும் கடினம். எங்கள் அலுவலகத்தை பொறுத்த வரை ஒரு வாரம் வீட்டிலிருந்து வேலை, ஒரு வாரம் அலுவலகத்தில் வேலை. வீட்டிலிருந்து வேலைப்பார்க்கும் போது எங்கள் சக பணியாளர்களுடன் முறையான கருத்து பரிமாறுதல் இல்லாததால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகம் வரும். ஆனால் அலுவலகத்தில் அப்படியல்ல. அதே போல் வீட்டில் வேலை செய்யும் போது அதிக நேரம் அலுவல் பணி செய்வதால் எனக்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை” என்றார்.
மனித வள மேம்பாட்டாளர் ஜாபர் அலி, வீட்டிலிருந்து வேலை செய்வதால் பணியாளர் தனிமையாக்கப்படுகின்றனர். அலுவலகத்தில் உள்ளது போல் வீட்டு சூழ்நிலை இருக்காது. அலுவலகத்தில் பணி செய்வதற்கான சுற்றுச்சூழல் இயல்பாகவே இருக்கும். ஆனால் வீட்டில் அப்படி இருப்பதில்லை. அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் நேரில் பேசுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் கலந்துரையாடலின் போது அலுவல் பிரச்சனைகள் பல சரிசெய்யப்படும். ஆனால் வீட்டில் இருந்தால் அலைப்பேசியில் தான் தொடர்பு கொள்ள முடியும். இது அலுவல் பிரச்சனைகளை பெரிதளவில் சரி செய்ய முடியாது.
இன்று தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. புதிய தொழில்நுட்பத்துக்கான பயிற்சியை பணியாளர் நேரில் வந்தால் தான் அளிக்க முடியும். வீட்டிலிருந்து வேலை செய்தால் , தொழிலாளியும் நிறுவனமும் தொழில்நுட்பத்தில் அப்டேட் ஆகாமல் இருக்கும். இதனால் தொழில் வளர்ச்சி பாதிப்படையலாம். வீட்டிலிருந்து வேலை செய்யும் போது நிறுவனத்தின் முக்கியமான தகவல்கள் தொழிலாளியை அறிந்தோ அறியாமலோ வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அலுவலகத்திலிருந்து வேலை செய்வதே தொழிலாளிக்கும், நிறுவனத்துக்கும் ஆரோக்கியமானது என்றார்.
தகவல் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கும் இன்றைய நிலையில் பணியாளர்களுக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும்பட்சத்தில் அல்லது பணியாளரே அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும்பட்சத்தில், வேலையின் தன்மையை பொறுத்து வீட்டிலிருந்து வேலை வெற்றிகரமானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.
தேவைப்பட்டால் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்து, தங்களுக்கான வேலையை திட்டமிட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் சில முன்னணி நிறுவனங்கள் தேவையின் அடிப்படையில் வீட்டிலிருந்து வேலை அளித்து அதனை வெற்றிகரமாகவும் செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக பயணம் இல்லை என்பதால் நேரம் மற்றும் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், பணியாளரின் செயல்பாட்டை பொறுத்தும் இதன் வெற்றி இருக்கிறது எனலாம்.