இந்த வருடம் கோடைகாலத்தில் வழக்கத்தைவிட வெயில் அதிகமாகச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, வடமேற்கு திசையில் புயல் உண்டானதால், தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்தது. இதனால் மக்களுக்கு வெப்ப அழுத்தம் (heat stress) போன்ற பாதிப்பு உண்டாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. சென்னை வானிலை மையம் இயக்குeர் பாலச்சந்திரன், “அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப அழுத்தம் உண்டாகும். அது உடலில் அசௌகர்யத்தை ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார்.
அதென்ன வெப்ப அழுத்தம்… அதனால் எத்தகைய பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்…
“கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும். அந்தச் சமயத்தில், வெயிலில் நேரடியாகச் செல்பவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வரும். வெப்பம் அதிகரிக்கும்போது நம் உடல், தானாக வியர்வையைச் சுரந்து, நம் உடலில் சேரும் வெப்பத்தை வியர்வையாக வெளியேற்றி விடும். ஆனால் அதுவும் ஓரளவுக்குத் தான் செயல்படும். அதிகமான வெப்பம் வியர்வையாக வெளியேறவில்லை எனில், அது உடலில் தங்கி வெப்ப அழுத்தத்தை உண்டாக்கும்.
நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள், வெயில் உச்சி நிலையில் இருக்கும்போது வெளியே அலைபவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் வெப்ப அழுத்த பாதிப்பு உண்டாகும் அபாயம் உள்ளது.
வெப்ப அழுத்தத்தால் வெப்பத் தடிப்பு, தசைப்பிடிப்பு, அதிகமாக தண்ணீர் தாகம் எடுப்பது, பசியின்மை, சரும பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் உடலில் ஏற்படும்.
அடுத்தகட்டமாக வெப்பத் தளர்ச்சி (heat exhaustion) உண்டாகும். உடல் களைப்பு அதிகரித்து கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், ரத்த அழுத்தம் குறைவது என உடலில் பல வகையான பிரச்னைகள் ஏற்படும்.
இதில் கடைசி கட்டமே, ஹீட் ஸ்ட்ரோக் (heat stroke). மூச்சுத் திணறல், பக்கவாதம், கை கால் இழுப்பு மற்றும் சுயநினைவு இழப்பது, மயங்கி விழுந்தபடியே உயிரிழக்கும் அளவிற்கு மிக மோசமான தாக்கத்தை இது உண்டாக்கும்.
இதற்கெல்லாம் மூலகாரணமாக இருக்கும் வெப்ப அழுத்தத்தில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் வெயிலில் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, அதிகப்படியான வெப்பநிலை கொண்ட அனல் காற்றில் நின்றால்கூட வெப்ப அழுத்தம் உண்டாகும். முக்கியமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இது போன்ற பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, முடிந்தவரை வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் வெளியே அலைவதைத் தவிர்ப்பது, இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது போன்ற விஷயங்களைப் பின்பற்றுவது நல்லது.
நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி, நுங்கு போன்ற காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவது நல்லது” என்றார்.
– பிரியதர்ஷினி. அ