வேலை வாங்கித் தருவதாக 15 லட்சம் பண மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு.!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம். சிவில் இஞ்சினியரான இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மாமியார் உத்திரகுமாரியும், அருப்புக்கோட்டை நகராட்சியில் ஊழியராக பணியாற்றும் லட்சுமி தேவியும் தோழிகள்.
இந்த நிலையில் லட்சுமி தேவி, ரகுராமிற்கு தலைமைச் செயலகத்தில் வேலை இருப்பதாகவும், அதற்கு பணம் கொடுத்தால் போதும் என்றும் உத்திரகுமாரியிடம் தெரிவித்தார். மேலும், உத்திரகுமாரிக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த வெள்ளைத்துரை என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் உத்திரகுமாரியை நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று டேனியல் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து டேனியல், உத்திரகுமாரியிடமிருந்து 15 லட்சம் ரூபாய் பணம் பெற்றார். சில நாட்கள் ஆகியும் வேலை குறித்து எந்த விதமான தகவலும் கிடைக்காததால் வெளிநாட்டில் இருந்துவந்த ரகுராம், டேனியலின் அலுவலகத்திற்குப் போய் விசாரித்துள்ளார். அப்போது டேனியல் இரண்டு காசோலைகளை ரகுராமிடம் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரகுராம் இந்தக் காசோலையை வங்கிக்கு எடுத்து சென்று பார்த்தபோது அதிலும் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இதனால், மீண்டும் ரகுராம் டேனியலிடம் போய் பணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்காத டேனியல் ரகுராமிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதன் பின்னர், ரகுராம் சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதன் படி போலீஸார், லெட்சுமி தேவி. டேனியல், வெள்ளைத்துரை உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.