10,11,12 தேர்வு முடிவுகள்! வட மாவட்டங்கள் ஏன் பின்னடைவு? வெள்ளை அறிக்கை கோரும் பாமக தலைவர்!

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் வட மாவட்டங்களே கடைசி இடம் பிடித்திருப்பதறகான காரணங்களை அலசி ஆராய்ந்து  தீர்வு காண இனியும் தவறக் கூடாது என்று, தமிழக அரசுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில். “தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அதே நேரத்தில் தேர்ச்சி விழுக்காட்டின் அடிப்படையில்  வழக்கம் போல வடமாவட்டங்களே கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் கடைசி 10 இடங்களைப் பிடித்த  இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவாரூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்  மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவற்றைத் தவிர மீதமுள்ள 6 மாவட்டங்களும் வட மாவட்டங்கள் தான். 11 முதல் 15 வரையிலான இடங்களைப் பிடித்த காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களுமே  வட மாவட்டங்கள் தான். 

பத்தாம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு ஆகிய மூன்று பொதுத்தேர்வுகளிலும் கடைசி இடத்தை பிடித்த மாவட்டம் இராணிப்பேட்டை என்பது பெருமைக்குரியது அல்ல.

கடந்த 44 ஆண்டுகளாகவே பொதுத்தேர்வுகளில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடிப்பது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் கடந்து செல்லக் கூடாது. அது அனைத்துப் பகுதிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கும் தத்துவத்திற்கு எதிரானது ஆகும். 

வட மாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டியது அரசின்  கடமை ஆகும். இந்தக் கடமையை தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக செய்ய வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தியிருப்பதைப் போன்று கல்வியில் வட மாவட்டங்களின் பின்தங்கிய நிலைக்கான காரணம் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

வெள்ளை அறிக்கையில் தெரியவரும் குறைகள் அனைத்தையும் காலவரையறை நிர்ணயித்து சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.