சென்னை: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதன்படி 90.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்.5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.
இதைத் தொடர்ந்து 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்பட்டன. இன்று மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.