போகோட், கொலம்பியாவில் உள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கிய 11 மாத சிசு உட்பட நான்கு குழந்தைகள், இரு வாரங்களுக்குப் பின் உயிருடன் நேற்று மீட்கப்பட்டனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள அமேசான் காட்டின் மேலே பறந்த தனியார் விமானம், கடந்த 1ம் தேதி விபத்துக்குள்ளானது.
இயந்திர கோளாறு காரணமாக, இந்த விமானம் காட்டின் மத்தியில் நொறுங்கி விழுந்தது. இதில், ‘ஹுய்டோட்டோ’ எனப்படும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்தனர்.
இந்த விபத்தில், ஒரு விமானி உட்பட நான்கு பேர் பலியாகினர். இதில் பயணித்த 11, 9, 4 வயதுடைய குழந்தைகளுடன், 11 மாத பச்சிளங்குழந்தை மாயமானது.
இதையடுத்து, இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. காடுகளில் உள்ள 130 அடி உயர ராட்சத மரங்களின் நடுவே நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில், நுாற்றுக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ‘நான்கு குழந்தைகளும் நேற்று உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்’ என, கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துஉள்ளார்.
இருப்பினும், குழந்தைகளின் உடல்நிலை குறித்த எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகள் என்பதால், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற தனித் திறன்கள் வாயிலாக, இரண்டு வாரங்களாக உயிர் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement