Dissolution of 1,512 inactive societies in Puducherry | புதுச்சேரியில் செயல்படாத 1,512 சங்கங்கள் கலைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் செயல்படாத 1,512 சங்கங்கள் கண்டறியப்பட்டு அதிரடியாக கலைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கல்வி, கலை, இலக்கியம், சமூக சேவை உள்ளிட்ட பொதுநலன் மேம்பாட்டுக்காக சங்கங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டியது அவசியம். கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நல சங்கம், அடுக்குமாடி வீட்டு உரிமையாளர் சங்கம், நகர் நலசங்கம் என, எந்த சங்கம் ஆரம்பித்தாலும், சங்கங்கள் பதிவு சட்டத்தில், பதிவு செய்யப்பட வேண்டும். இவை, அச்சங்களின் சட்ட விதிகளின்படியே, செயல்பட வேண்டும்.

இதன்படி மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் சங்கங்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள், முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக, இந்திய கம்பெனி விவகாரத் துறைக்கு புகார்கள் சென்றன.
இது தொடர்பாக புதுச்சேரியில் உள்ள மாவட்ட சங்கங்களின் பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார். இதில், கடந்த 1996 ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல சங்கங்கள் செயல்படாமல் இயங்கி வருவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாநிலத்தில் செயல்படாத 1512 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை சங்கங்களின் பதிவாளர் கோகுல்நாத் பிறப்பித்துள்ளார்.

இந்த கலைப்பு பட்டியல் அரசாணையாக பொதுமக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளன. கலைக்கப்பட்டுள்ள சங்கங்கள் பட்டியலில் நற்பணி மன்றங்கள், இளைஞர் மன்றங்கள், மகளிர் மன்றங்கள், விளயைாட்டு மன்றங்கள், பெற்றோர் சங்கங்கள், குடியிருப்பு சங்கங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

காரணம் என்ன

புதுச்சேரியில் புற்றீசல்போல் சங்கங்கள் முளைத்து வருகின்றன. பத்து பேரை வைத்து கொண்டு சங்கங்கள் ஆரம்பிப்பதும் அதன் பிறகு காணாமல் போவதுமாக உள்ளது. சங்கங்களை பதிவு செய்தால் மட்டும்போதாது, சங்க விதிமுறைகளின் ஆண்டு தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விபரங்களை, சம்பந்தப்பட்ட சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த சங்கங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் டிமிக்கி கொடுத்து வந்தன.

சங்கங்கள் செயல்படுகிறதா என்று அறிய, மாவட்ட பதிவாளர் மூலம் பல முறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியும், முறையான பதில் வரவில்லை. சங்க முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பியுள்ளன.
இந்த சங்கங்கள், பதில் அளிக்க வேண்டும் என, கடைசி வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும் பதில் வராததால் வேறு வழியின்றி கலைக்கப்பட்டுள்ளன. இந்த சங்கங்களின் பெயர்கள், பதிவுத்துறை கோப்புகளில் இருந்து விரைவில் நீக்கப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.