நடிகர்கள்: வாமிகா காபி, பிபி
இசை: இளையராஜா
இயக்கம்: தியாகராஜன் குமாரராஜா
ஓடிடி: அமேசான் பிரைம்
சென்னை: 6 காதல் கதைகளை 6 இயக்குநர்கள் இயக்க பல முன்னணி நடிகர்கள் நடித்து மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியாக வெளியாகி உள்ளது. இதில், ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கி ரசிகர்களை மிரட்டிய தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை கதை 6வது கதையாக இடம்பெற்றுள்ளது.
வாமிகா காபி சாம் கதாபாத்திரத்திலும் PB (K) எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவின் இசையை பயன்படுத்தி உள்ள விதம் ஒரு அழகான ஓவியம் போல உள்ளது.
ஆனால், இயக்குநர் தியாகராஜன் குமாராஜாவின் ஸ்க்ரீன்பிளே ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
நினைவோ ஒரு பறவை கதை: சாம் மற்றும் கே இருவரும் காதலிப்பதை விட காமத்தில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தரையில் போட்டிருக்கும் பெட்டில் ஆரம்ப காட்சியில் இருந்து பல சீன்கள் மெத்தையிலேயே கலவி கொள்ளும் காட்சிகளாக கழிந்து விடுகின்றன.
அதன் பின்னர் ரிலாக்ஸுக்காக ஹீரோயின் வாமிகா காபி சிகரெட் எடுத்து பற்ற வைப்பதும் காதலருக்கு ஒரு சிகரெட் கொடுப்பதுமாக செல்கிறது. ஒரு கட்டத்தில் எப்போதுமே பிரிய மாட்டோம் என பேசி வரும் இருவரும் திடீரென பிரேக்கப் செய்து பிரிகின்றனர்.
அதனால், ஹீரோயின் வாமிகா காபி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அந்த நபரின் நினைவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என மனநல மருத்துவர் கூற அதன் படி நடக்க முயற்சிக்கும் நேரத்தில், கேவின் தங்கை சாமை சந்திக்கிறார். தனது அண்ணன் விபத்தில் சிக்கி பழைய நினைவுகளை இழந்து விட்டதாகவும் நீங்க வந்து பழைய நினைவுகளை நினைவூட்டினால் நல்லா இருக்கும் என சொல்ல, சாமும் கேவை சந்தித்து அவர்கள் இருவரும் படுக்கையில் சந்தோஷமாக இருந்தது முதல் காதலித்தது வரை அனைத்தையுமே சொல்கிறார்.
நாம பிரேக்கப் பண்ணிட்டோமா என அந்த நபர் கேட்க, அதை பற்றி சொல்ல மறுக்கும் சாமுடன் மீண்டும் சண்டை போடுகிறார். நான் உன் கூட சேர வரலை, உனக்கு ஹெல்ப் பண்ணதான் வந்தேன் என சொல்லி விட்டு அவர் கிளம்ப, அவரை துரத்திக் கொண்டு வீட்டுக்கு வரும் கே மன்னிப்பு கேட்டு விட்டு அவருடன் சேர்வது போல கதையை முடித்து விட்டார் இயக்குநர் தியாகராஜன் குமாராஜா.
பிளஸ்: வாமிகா காபியின் அழகும் அந்த குண்டு பல்பு கண்களையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கலாம். இசையும் ஒளிப்பதிவும் கடைசி வரை ஏதோ ஒன்றை பெரிதாக இயக்குநர் சொல்லப் போகிறார் என பார்க்க வைத்து விடுகின்றன. அந்த மழையில் ஓடும் காட்சியில் மட்டுமே காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கலவி கொள்ளும் காட்சியையும் ரசிக்கும் படி ஆரம்பத்தில் பாட்டில் விழுவது, மற்ற பொருள் அசைவது தொடங்கி உலகமே அதிர்வது போன்ற காட்சியமைப்பு இந்த கதைக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக உள்ளது.
மைனஸ்: ரக்கட் பாய் லுக்கில் வரும் அந்த கே ஹீரோ பார்த்த உடனே பிடிக்கும் கேரக்டராக இல்லை. கடைசி ஷாட்டில் கூட அந்த நபரின் நடிப்பு எங்கேயும் ஆழமாகவோ அழுத்தமாகவோ இல்லாதது இந்த கதைக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களில் இருந்ததை போன்றே இந்த கதையிலும் அதிகமான மேட்டர் சீன்களும், அடல்ட் ஒன்லி காட்சிகளும் தான்.
அந்த காட்சிகளை வைத்தாலும், இருவர் மட்டுமே இருக்கும் அந்த தனி அறையில் அத்தனை பெரிய போர்வை எதுக்கு என்றே தெரியவில்லை. அந்த டாய்லெட் இருக்கும் இடத்தை பார்த்தால், இவ்ளோ ஓபனாகவா இருக்கும் என்றும் அந்த ஹீரோயினின் வீடே ஒரு புரியாத புதிராக உள்ளதும் இன்டென்ஸ் ஆர்கஸம் பற்றி எல்லாம் தத்துவமாக பேசுவதும் லஸ்ட் ஸ்டோரி சீரிஸை எடுத்து வைத்திருக்கிறாரே இதில் எங்கே மாடர்ன் சென்னை காதல் இருக்கிறது என கேட்க வைத்து விடுகிறது.