ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினி கௌரவ தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடிக்கிறார்.
நேற்று மும்பையில் அவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், படப்பிடிப்பு குறித்து விசாரித்தேன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது விஷ்ணு விஷால், விக்ராந்த்தை வைத்து கிரிக்கெட் தொடர்பான படம் ஒன்றை இயக்கி வருகிறார். படத்தின் பெயர் ‘லால் சலாம்’. இதில் கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் இருந்த ரஜினி, ‘ஜெயிலர்’ தோற்றத்தில் இருந்து வெளிவந்ததும், ‘லால் சலாம்’ படத்திற்காக தேதிகளைக் கொடுத்தார். அதில் அவர் இஸ்லாமியராகவும், அவரது கேரக்டருக்கு மொய்தீன் பாய் என்றும் அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
‘லால் சலாம்’ கிரிக்கெட் தொடர்பான கதை என்பதால், வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரஜினியும், கபில்தேவ்வும் வெற்றிக் கோப்பை வழங்கியது போன்ற நேற்று படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். 1983 உலகக் கோப்பையை தன் தலைமையில் இந்தியாவுக்காக வென்று கொடுத்தவர் கபில்தேவ். அப்படிப்பட்ட ஜாம்பவானுடன் நடித்தது தனக்கு பெருமை என்று ரஜினியும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்து வந்த படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. கபில்தேவ் போர்ஷன் ஒரு நாள் மட்டும்தான் இருந்தது. இந்நிலையில் மும்பையில் கடந்த பத்து நாட்களாக நடந்து வந்த படப்பிடிப்பு, நேற்றோடு நிறைவடைந்தது. ரஜினி இன்று சென்னை திரும்பிவிட்டார். இதனையடுத்து ஹைதராபாத் அல்லது திருவண்ணாமலை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. ஹைதராபாத்தில் நடக்கும் போர்ஷனிலும் ரஜினி பங்கேற்பார் என்கிறார்கள். ‘லால் சலாம்’ படத்தை முடித்துக் கொடுத்த பிறகே ரஜினி அடுத்து த.செ.ஞானவேலின் படத்திற்குச் செல்கிறார். அதன் படப்பிடிப்பு அனேகமாக ஜூலையில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.