சென்னை: இயக்குநர் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்திய நடிகர் செவ்வாழை ராசுவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நல்லதுல கலந்து கொள்ளவில்லை என்றாலும் கெட்டதில் கலந்து கொள்ள வேண்டும் என சொல்வார்கள். பாரதிராஜா போன்ற ஒரு சில பிரபலங்கள் சக சினிமா கலைஞர்களின் மறைவு நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து சென்று வருகின்றனர்.
உடல்நலக்குறைவு காரணமாக மே 18ம் தேதி மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு காலமானார். இந்நிலையில், இன்று நடைபெற்ற அவரது இறுதிச்சடங்கில் இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
கிழக்குச் சீமையிலே படத்தில் அறிமுகம்: தேனியை சேர்ந்த செவ்வாழை ராசு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விஜய்யின் வேலாயுதம், விக்ரமின் கந்தசாமி, கார்த்தியின் பருத்தி வீரன் என 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்திருந்தார் செவ்வாழை ராசு.
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவரை பாரதிராஜா அவரது கிராமத்து மண் சார்ந்த முகத்தை பார்த்தே தேர்வு செய்துள்ளார். பருத்திவீரன் படத்தை இயக்கும் போதும் அமீர் செவ்வாழை ராசுவையே அந்த காமெடி கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்திருந்தார்.
நகைச்சுவையாக சினிமாவில் நடித்து வந்த இவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும், வில்லனாக நடிக்க மாட்டேன் என்கிற உறுதியில் இருந்ததாக பழைய பேட்டிகளில் கூறியுள்ளார்.
பாரதிராஜா நேரில் அஞ்சலி: செவ்வாழை ராசு உயிர் இழந்த நிலையில், பருத்தி வீரன் படத்தில் நடித்த நடிகர் கார்த்தி ட்வீட் கூட போட்டு இரங்கல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், செவ்வாழை ராசுவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா அவரது சொந்த ஊருக்கே சென்று செவ்வாழை ராசுவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மனைவி உருக்கம்: சினிமாவில் வாய்ப்பு கொடுத்தாருன்னு சொல்வியே, அந்த பாரதிராஜா வந்திருக்காரு பாரு எந்திரிப்பா.. என் அண்ணன்னு மூச்சுக்கு 300 தடவை சொல்வியே அந்த பாரதிராஜா வந்திருக்காரு எந்திரிப்பா என செவ்வாழை ராசுவின் மனைவி உருக்கமாக பேசிய காட்சிகள் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
செவ்வாழை ராசுவின் மறைவு செய்தியை அறிந்த சில சினிமா பிரபலங்கள் மற்றும் பல ரசிகர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.