வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: பாகிஸ்தானுடன் சுமூகமான மற்றும் அண்டை நாட்டுடனான நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
பாக்., விவகாரம்
அந்த பேட்டியில் மோடி கூறியதாவது: அண்டை நாடான பாகிஸ்தானுடன் சுமூகமான மற்றும் அண்டை நாட்டுடனான நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பதை நிறுத்தி விட்டு, பயங்கரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானின் பொறுப்பு. அது குறித்து அந்த நாடு உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சீன பிரச்னை
சீன பிரச்னை தொடர்பான கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க இந்தியா தயாராக உள்ளது. அதற்கு உறுதிபூண்டுள்ளது. சீனாவுடன் சுமூக உறவு நிலவுவதற்கு எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் சமாதானம் நிலவுவது முக்கியம். பரஸ்பர மரியாதை, நலன் அடிப்படையில் மட்டுமே இந்தியா சீனா இடையிலான உறவு எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் என்றார்.
மத்தியஸ்தமா?
ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதலில் இந்தியா மத்தியஸ்தராக பணியாற்றுமா என்ற கேள்விக்கு மோடி கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது. அமைதியின் பக்கம் இந்தியா உள்ளது. அதில் உறுதியாக இருப்போம். உணவு, எரிபொருள் மற்றும் உரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் சவால்களை சந்தித்து வரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement