புதுக்கோட்டை : 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததோடு ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 23 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிதித்துறை சார்ந்து முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்ககளைச் சந்தித்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன்பு மத்திய அரசு மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும், 2016ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியபொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போதும் திமுக அந்த நடவடிக்கையை எதிர்த்திருக்கிறது.
எனவே, ஒரு முடிவு எடுக்கும்போதும், வருங்காலத்தில் இது போன்ற முடிவு எடுக்க நேர்ந்தாலும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசிப்பது முறையாக இருக்கும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.