ஹிரோஷிமா: “உக்ரைனில் நடந்து வரும் போர் உலகம் முழுவதுக்குமான பிரச்சினை. உலகை பல வழிகளில் இந்தப் போர் பாதித்து வருகிறது.” என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹிரோஷிமாவில் 19 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக ஹிரோஷிமா நகருக்கு மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலை இந்திய அரசால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இது போருக்கான காலம் அல்ல என்றும், போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ராஜ்ஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பு தொடங்கிய பின்னர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும், பிரதமர் மோடியும் போனில் பல முறை பேசியுள்ளனர் என்றாலும், போருக்கு பின் முதல்முறையாக சந்திப்பது இதுவே முதல்முறை. இந்த சந்திப்பில் இருநாட்டு உறவும் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
அப்போது, “உக்ரைனில் நடந்து வரும் போர் உலகம் முழுவதுக்குமான பிரச்சினை. உலகை பல வழிகளில் இந்தப் போர் பாதித்து வருகிறது. நான் இதை ஒரு அரசியல் பிரச்சினையாகவோ பொருளாதார பிரச்சினையாகவோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை, இது மனிதநேயம் மற்றும் மனித உயிர்களின் மதிப்பு பிரச்சினை.
போரின் துன்பம் எங்கள் அனைவரையும் விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த ஆண்டு போர் தொடங்கிய பின் அங்கிருந்து திரும்பிய எங்கள் நாட்டு மாணவர்கள் அங்குள்ள சூழ்நிலைகளைச் சொன்னபோது, உக்ரேனிய குடிமக்களின் வேதனையை என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இத்தருணத்தில் ஒன்றை மட்டும் உறுதியளிக்கிறேன்.. தற்போதைய சூழலைத் தீர்க்க இந்தியாவும், நானும் தனிப்பட்ட முறையில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் இருந்தார்.