பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் இலப்பைக்குடிக்காடு அருகே உள்ள பெண்ணக்கோணம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி. இவரது மகன் சந்தோஷ்குமார் மற்றும் அவரது மனைவி சிவசங்கரி ஆகிய இருவரும் சென்னையில் உள்ள ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இவர்களிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் சந்தோஷ்குமாரின் மனைவி சிவசங்கரியை சென்னையில் வைத்து பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சந்தோஷ் குமாரின் தாயாரும் திமுக ஊராட்சி மன்ற தலைவியுமான ஜெயலட்சுமி இதே பாணியில் பொய் சொல்லி சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர்கள் 6 பேரிடம் 5 கோடியே 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயலட்சுமி பணத்தை மோசடி செய்தது உறுதியானதை அடுத்து திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி ஜெயலட்சுமியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். திமுக தலைவியின் குடும்பத்தினர் ஒரே பொய் சொல்லி ஊர் முழுக்க பணத்தை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.