ஒன்றிய அரசு வழங்கும் சூப்பர் திட்டம்.. யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா?

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நேரடிப் பரிமாற்றப் பலன் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளின் வங்கி (அ) அஞ்சல் சேமிப்புக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை ரூ.5,000 செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம் பிரதமர் மோடியால் 2016ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவிக்கப்பட்டு, 2017ம் ஆண்டின் ஜனவரி மாதம் 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது. இந்த 5,000 ரூபாய் நிதியுதவி என்பது மொத்தம் மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. வீட்டிலிருக்கும் பெண்களோ அல்லது வேலைக்குச் சென்று பிரசவத்துக்காக வீட்டில் இருக்கும் பெண்களோ போதிய நிதி இல்லாமல் தங்களது கர்ப்ப காலச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக இந்த உதவி அரசிடமிருந்து வழங்கப்படுகிறது.

முதல் தவணையில் 1,000 ரூபாய், இரண்டாம் தவணையில் 2,000 ரூபாய் மற்றும் மூன்றாம் தவணையில் 2,000 ரூபாய் என படிப்படியாக வழங்கப்படுகிறது. கர்ப்பத்துக்காக பதிவு செய்த பின்னர் தடுப்பூசி போடுவதற்கான பதிவு அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு அரசு சுகாதார மையத்தில் ஒருமுறையாவது பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். கர்ப்பம் தரித்த 150 நாட்களுக்குள் இந்த நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தவணைப் பணத்தைப் பெறுவதற்கு குழந்தை பிறப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம். பயனாளியின் ஆதார் கார்டு, அடையாள முகவரி ஆவணம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மருத்துவச் சான்றுகள் ஃபார்ம் 1ஏ, 1பி, 1சி ஆகிய ஆவணங்கள் அவசியம். https://pmmvy-cas.nic.in/public/beneficiaryuseraccount/login என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு நேரடியாகச் சென்றும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி:

அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கர்ப்பகால சிகிச்சையின் போது இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து நிதி உதவியைப் பெறலாம். மேலும், https://pmmvy.nic.in/Account/Login என்ற இணையதளம் வாயிலாகவும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 3 கோடிக்கும் அதிகமான கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர். ஒன்றிய அரசினால் சுமார் 13.766 ரூபாய் கோடி பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்குச் செலவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.