கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்துவிட்டது. பாஜகவின் ஆபரேஷன் தொல்லை கிடையாது. ஆட்சி, அதிகாரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நெருக்கடிகள் கிடையாது. அப்படியெனில் காங்கிரஸ் சுமூகமாக 5 ஆண்டுகளை ஆட்சி செய்து விடுமா? என்றால் அதுதான் இல்லை. ஏனெனில் நெருக்கடியும், சவால்களும் சிவப்பு கம்பளத்தில் ஏறி வர காத்திருக்கிறது. அப்படி என்னென்ன சிக்கல்கள் வரப் போகின்றன என வரிசையாக பார்க்கலாம்.
தலித் துணை முதலமைச்சர்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வரா துணை முதலமைச்சர் பதவி தலித் தலைவர் ஒருவருக்கு தான் வழங்கப்பட வேண்டும் என்று ஆட்சி அமைப்பதற்கு முன்னதாகவே வெடியை கொளுத்தி போட்டுள்ளார். ஏனெனில் இவர் ஒரு தலித் தலைவர். டிகே சிவக்குமாருக்கு அந்த பதவி அளித்தது அதிருப்தியாக கூட இருக்கலாம். எனவே எதிர்காலத்தில் ஏக்நாத் ஷிண்டே போல ஜி.பரமேஸ்வரா காய் நகர்த்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். அடுத்து அமைச்சரவை பட்டியலை சரியாக தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இடம்
இதில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். ஒன்று, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். இரண்டாவது சமூக வாரியாக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். தற்போது லிங்காயத்து 39, ஒக்கலிகா 21, எஸ்.சி 22, எஸ்.டி 15, இஸ்லாமியர்கள் 9, குருபா 8 என எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளனர். மூன்றாவது, முக்கியமான துறைகளை யார் வசம் அளிப்பது. இதில் சங்கடங்கள் எழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்
மேற்குறிப்பிட்ட விஷயங்கள் ஆட்சி அமைக்கும் முன்பாகவே சலசலப்பை ஏற்படுத்தின. ஆட்சி அமைந்ததற்கு பின்னர் என்னவெல்லாம் சிக்கல் வரும் என்பதை அலசலாம். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்பது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது. 5 முக்கியமான வாக்குறுதிகள் என்ற பெயரில், 200 யூனிட் இலவச மின்சாரம்,
தேர்தல் வாக்குறுதிகள்
இல்லத்தரசிகளுக்கு 2,000 ரூபாய் உரிமைத் தொகை, BPL ரேஷன் கார்டுகளுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,500 முதல் 3,000 ரூபாய் வழங்குவது, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம். இவை அனைத்தும் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்தும் போது பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படும்.
ஆபரேஷன் லோட்டஸ்
ஆனால் நிறைவேற்றாவிட்டால் மக்கள் அதிருப்தி அடைவர். மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் காங்கிரஸின் எதிர்கால அரசியலுக்கு பின்னடைவாக மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளும் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையில் அதிகார மோதல் ஏற்படும். இது ஆட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். இதுதவிர ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை பாஜக அபகரித்து செல்லாமல் ஒரு கண் வைப்பது அவசியமாக பார்க்கப்படுகிறது.