தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டப்பேரவைத்தேர்தல் கடந்த, 10ம் தேதி நடந்து முடிந்தது. பல மாநிலங்களில் தோல்வியை தழுவி சரிவை சந்தித்திருந்தது காங்கிரஸ். இந்த நிலையில் தான் கர்நாடகாவில் மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 135 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
இன்று பெங்களூரு ஸ்ரீகண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்த விழாவில், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர். இவர்களுடன், எட்டு கேபினட் அமைச்சர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
3 தலித், தலா 1 இஸ்லாமியர், கிறிஸ்தவர் !
இதில், முக்கியமானதாக, முதல்வர் பதவிக்கு காய் நகர்த்திய தலித் சமூகத்தை சேர்ந்த ஜி.பரமேஸ்வரா, தலித் சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் மகன் பிரியங் கார்கே, கே.ஹெச்.முனியப்பா, லிங்காயத் தலைவர் எம்.பி.பாட்டில், ராமலிங்கா ரெட்டி, இஸ்லாமியரான B.Z. ஜமீர் அஹமது கான், கிறிஸ்தவரான கே.ஜே.ஜார்ஜ், சதீஸ் ஜார்கிஹோலி (ST சமூக பிரிவு) ஆகிய எட்டு பேர், கேபினட் அமைச்சர்களாகியிருக்கின்றனர்.
‘நெகட்டிவ் டு பாசிட்டிவ்’!
கர்நாடகத்தின் மொத்தம் மக்கள் தொகையில், 13.2 சதவிகிதத்துக்கும் மேல் இஸ்லாமிய மக்கள் இருக்கும் நிலையில், இந்த தேர்தலில், 224 தொகுதிகளில், ஒரு இடத்தில் கூட பா.ஜ.க சார்பில், இஸ்லாமிய வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. மேலும் ஹிஜாப் பிரச்னை, இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து’ என, பல பிரச்னைகளில், பா.ஜ.க கர்நாடகா இஸ்லாமிய மக்களின் அதிருப்தியை சம்பாதிருந்தது.
இந்த அதிருப்தியை தங்களுக்கு ‘பாசிட்டிவ்’ ஆக பயன்படுத்திய காங்கிரஸ், ஒரு பெண் வேட்பாளர் உள்பட, 15 இஸ்லாமியர்களை தேர்தலில் களமிறக்கியது. இதில், 9 பேர் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்கின்றனர். அதேபோல் பா.ஜ.கவை விட அதிக இடங்களில், தலித், பழங்குடியின வேட்பாளர்களை களமிறக்கி வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படியான நிலையில், ‘கர்நாடகத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவோம்,’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி கூறியதைப்போல், முதல் கேபினட் பட்டியலிலேயே, ஒரு இஸ்லாமியர், ஒரு கிறிஸ்தவர், 3 தலித் தலைவர்கள், கேபினட் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தேர்தலுக்குப்பின்னும், ஒட்டுமொத்தமாக அனைத்து சமூக மக்களையும் திருப்திப்படுத்த, காங்கிரஸ் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
அரசியல் விமர்சகர்கள் காங்கிரஸ் சமூக வாரியாக தலைவர்களுக்கு, சமமான முன்னுரிமை கொடுப்பது, மாற்றத்தை நோக்கி காங்கிரஸ் நகருவதாக தெரிவிக்கின்றனர்.
சமூக வாரியான காங்கிரஸின் ‘Micro-Politics’, சமூக வாரியான தலைவர்களின் உள்கட்சி பூசல்களை தற்காலிகமாக சமாளித்திருக்கிறது என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.