கூவத்தூர் காவல் நிலையத்தில் மது போதையில் அலப்பறை செய்துகொண்டிருந்த நபர் இன்று காலை கால் கட்டுடன் ஆஸ்பத்திரியில் படுத்து கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரின் கால் எவ்வாறு உடைந்தது? கஸ்டடி டார்ச்சரா என்று பல தரப்பினரும் காவல்துறையை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வேப்பஞ்சேரியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கூவத்தூர் போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளனர். அப்போது நாகராஜ் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டியை பறிமுதல் செய்த போலீசார் நாகராஜை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். மது போதையில் இருந்த நாகராஜ் காவல் நிலையத்தில் போலீசாரை ஒருமையில் திட்டி அலப்பறை செய்துள்ளார். அதனை காவலர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோதான் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் நாகராஜ் இடது காலில் கட்டுபோட்டபடி மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக நாகராஜை ‘ காமெடி பீஸ்’ என்றும் ‘ குள்ள மனிதர்’ என்றும் போலீசார் கிண்டல் செய்ததாகவும் அதனால் அவர் தூண்டப்பட்டு ஒருமையில் திட்டியதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் மது போதையில் இருக்கும் ஒருவரது மனநிலையை அறிந்து கொள்ளாமல் காலை உடைத்திருப்பது நியாயமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், நாகராஜ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை. இந்தநிலையில், இச்சம்பத்துக்கு அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்து காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
அறப்போர் இயக்கம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அரசாங்கம் நடத்தும் சாராய கடையில் சாராயம் வாங்கி, அரசியல் கட்சியினர் நடத்தும் சாராய பாரில் அமர்ந்து குடித்து விட்டு போதையில் வண்டி ஓட்டி பிடிபட்டு காவலர்களை அவதூறாக பேசினால் காவல்நிலையத்தில் வைத்து காலை உடைக்கலாம் என்று எந்த சட்ட பிரிவு கூறுகிறது என்று சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் விளக்கம் அளிப்பார்களா? தமிழக காவல்துறைக்கு இதுவா பெருமை?’ என இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.