திண்டுக்கல்: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்ற திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி நந்தினி பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே, அவர் எந்த படிப்பில் சேர்ந்துள்ளார் தெரியுமா?
தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 9,689 மாணவர்கள், 11 ஆயிரத்து 113 மாணவிகள் என மொத்தம் 20,802 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 8,840 மாணவர்கள், 10,665 மாணவிகள் என மொத்தம் 19,505 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.77 சதவீதம் ஆகும். மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் திண்டுக்கல் மாவட்டம் 21 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி அனைத்து பாடங்களில் 600-க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
தந்தை தச்சு தொழிலாளியாக இருந்த போதிலும் குடும்ப கஷ்டத்திலிருந்து எதிர்நீச்சல் போட்டு இந்த சாதனையை அவர் எட்டியிருக்கிறார். இதுவரை யாரும் இவரை போல் முழு மதிப்பெண்களை எடுத்ததில்லை என கூறப்படுகிறது. இந்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த மாணவியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் பாராட்டினர்.
மேகங்கள் கலைகின்றன படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து மாணவி நந்தினிக்கு பரிசாக அளித்திருந்தார். மாணவி நந்தினியை அவர் படித்த பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என பாராட்டி உச்சி முகர்ந்தனர். சென்னை வர வேண்டும் என்பது லட்சியமாக இருந்த அந்த மாணவி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற சென்னை வந்ததை மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.
அது போல் அந்த மாணவி எடுத்தது வணிகவியல் பாடப்பிரிவு. ஆனால் அது தெரியாமல் நிறைய பேர் நீட் தேர்வு இல்லாவிட்டால் அந்த மாணவி தான் பெற்ற மதிப்பெண்ணுக்கு மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பார் என பேசி வந்தனர். ஆனால் அவர் பிளஸ் 1 வகுப்பில் தாவரவியல் பிரிவை எடுக்கவில்லை. அவர் எடுத்தது வணிகவியல் பிரிவு. இந்த நிலையில் அந்த மாணவி சிஏ படிக்க வேண்டும் என்பது தனது லட்சியம் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் அவருக்கு பட்டப்படிப்பை இலவசமாக கொடுக்க நிறைய கல்லூரிகள் போட்டி போட்டன. ஆனால் அவர் தேர்வு செய்தது கோவையில் உள்ள பிரபல கல்லூரியான பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இங்கு அவர் எடுத்த படிப்பு B.Com Professional Accounting. இந்த படிப்புக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் உள்பட அனைத்தையும் நந்தினிக்கு அந்த கல்லூரி நிர்வாகமே இலவசமாக வழங்குகிறது.
இந்த பட்டப்படிப்பை எடுத்த மாணவிக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆய்வு, அக்கவுண்டிங், ஆசிரியை பணி, பைனான்சிங் உள்ளிட்ட துறைகளில் அவர் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இந்த கோர்ஸுக்கு கூகுள், எல் அன்ட் டி இன்போடெக், டெல், அடோபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பார்க் அசென்ட், ஜஸ்ட் டயல், ஜென்பாக்ட் ஆகிய பெரிய நிறுவனங்களில் பணி கிடைக்கும்.
அது போல் அக்கவுண்டிங் கிளார்க், ஆடிட்டர், சீனியர் அக்கவுண்ட்டன்ட், வங்கி புரபேஷனரி ஆபிசர், அக்கவுண்ட் எக்ஸிகூட்டிவ், ஃபினான்சியல் அனலிஸ்ட், கம்பெனி செக்ரட்டரி, சார்ட்டர்டு அக்கவுண்டட் உள்ளிட்ட பணிகள் கிடைக்கும். இந்த படிப்பு 3 ஆண்டுகளாகும். முற்றிலும் செய்முறை விளக்கத்துடன் படிப்பது. இந்த படிப்பைத்தான் நந்தினி தேர்வு செய்துள்ளார்.