சென்னை: எந்த பக்கம் திரும்பினாலும், 2000 ரூபாய் பேச்சாகத்தான் இருக்கிறது.. ஆனால், 10 ரூபாய் நாணயம் பற்றி ஒருத்தரும் வாயே திறப்பதில்லையே ஏன்? அந்த 10 ரூபாய் காயின் செல்லுமா? செல்லாதா? என்று மண்டையை பிய்த்து கொள்கிறார்கள் நம் மக்கள்.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் வருடம், 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது… அப்போது, அந்த நாணயத்தில் “வேற்றுமையில் ஒற்றுமை” மற்றும் “இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்” என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது.
பிறகு, புது புது டிசைன்களில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு வரப்படுகிறது. இருந்தாலும், பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
வதந்திகள்: காரணம், அடிக்கடி பரவி வரும் வதந்திகள் காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுக்கின்றனர்… இதனால், பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கவும், வைத்திருக்கவும் தயக்கம் காட்டுகின்றனர். முக்கியமாக பஸ், கண்டக்டர்கள், கடைக்காரர்கள், சில வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழும அதிகாரிகள் இது தொடர்பாக கூடி விவாதித்தனர்.. அப்போது சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.. அதன்படி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும், பேருந்துகளில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
முற்றுப்புள்ளி: அதேபோல, வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித மறுப்புமின்றி நாணயங்களை வாங்க வேண்டும். வங்கிகளிலும் இதுகுறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும். மேலும், அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்களை வெளியிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.
நீளும் குழப்பம்: இன்னமும்கூட, 10 ரூபாய் காயின் செல்லுதா? செல்லாதா? என்ற குழப்பம் மக்களிடம் டிநிலவி வருகிறது. சென்னையில் மட்டுமே 10 ரூபாய் நாணயம் செல்லுபடியாவது போல தெரிகிறது..கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி போன்ற சில மாவட்டங்களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.. மற்றபடி,
வேறு எந்த இடங்களில் 10 ரூபாய் காயின் தந்தால் ஏற்க மறுக்கிறார்கள்.. ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், இந்த 10 ரூபாய் நாணயம் குறித்த நம்பகத்தன்மையை சொன்னாலும்கூட, பெரும்பாலானோர் அதை ஏற்க மறுக்கிறார்கள்.. இதனால், இந்த 10 ரூபாய் காயினை வைத்து கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் பலர் விழித்து வருகிறார்கள்..
ஆனால், இந்த 10 ரூபாய் நாணயத்தை ஏன் வாங்க மறுக்கிறோம் என்று சில காரணங்களை கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.. அதாவது, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு 10 ரூபாய் நாணயத்தை மாற்ற முடிவதில்லையாம்..
10 ரூபாய் காயின்: உதாரணமாக, ஒருவர் தன் கடையில் 10 ரூபாய் நாணயம் வாங்கிவிட்டார் என்றால், அதை மறுபடியும் வேறு வாடிக்கையாளரிடமோ, வேறு கடையிலோ மாற்ற முடியாது. இதற்காக அந்த கடைக்காரர், நேரம் செலவழித்து வங்கிக்கு செல்ல வேண்டியிருக்கிறதாம்.. வங்கியிலும் வரிசையில் நின்று படிவத்தை நிரப்பிய பிறகுதான் நான், அந்த பணத்தை தன் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமாம்.. ஆனால், இதுவே, பணமாக இருந்தால், பிரச்னையாக இருக்காது என்பதால்தான், காயின் வாங்க மறுப்பதாக சொல்கிறார்கள்.
அதேபோல, ஸ்விக்கி போன்ற நிறுவனத்தில் வேலை பார்ப்போருக்கு, இந்த 10 ரூபாய் நாணயம் நடைமுறை சிக்கலை தருவதாக சொல்கிறார்கள்.. கஸ்டமர்களுக்கு உணவு தந்தபிறகு, அவர்கள் தரும் பணத்தை, ஸ்விக்கி நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வேண்டுமாம்-. அப்படி செய்யும்போது நாணயங்களாக இருந்தால், கடைகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதனால்தான், 10 ரூபாய் நாணயங்களை கஸ்டமர்கள் தந்தால் ஏற்க மறுக்கிறோம் என்கிறார்கள்.
வழிய சொல்லுங்க: அந்தவகையில், 10 ரூபாய் நாணயங்கள் குறித்த பிரச்சனை இன்னமும் தீராமலேயே உள்ளதாக தெரிகிறது.. அவசரத்துக்குகூட 10 ரூபாயை யாரும் வாங்கி கொள்ளாத சூழல் உள்ளதால், பொதுமக்கள் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.. 2000 ரூபாய் விவகாரம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த 10 ரூபாய் நாணயத்துக்கான விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள் என்கிறார்கள்.. ஆக மொத்தம், இந்த 10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லதா? முதலில் இதுக்கு ஒரு வழியை சொல்லுங்கப்பா என்கிறார்கள் நெட்டிசன்கள்!!