டோக்கியோ : ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி ஹிரோஷிமா நகரில் மார்பளவு காந்தி சிலையை திறந்து வைத்து அந்நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஜப்பானில் காந்தி சிலை திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து பிற நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் இருநாடுகள் இடையேயான உறவை பலப்படுத்தும் பணியை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று முதல் வரும் 24ம் தேதி வரை 6 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு புறப்பட்டார். முதல் கட்டமாக ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்பதாகவும், அதன்பிறகு ஆஸ்திரேலியா மற்றும் நியூ பப்புகினியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். ஜி 7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்க சென்றார். இந்நிலையில் தான் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி ஹிரோஷிமா நகரில் தேசப்பிதா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
உலகில் முதல் முதலாக அணு ஆயுத தாக்குதலில் உள்ளான நகராக ஜப்பானின் ஹிரோஷிமா உள்ளது. ஹிரோஷிமா நகரில் 1945 ம் ஆண்டில் முதல் முதலாக அமெரிக்கா அணுஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியது. இதில் சுமார் 1.40 லட்சம் பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஜப்பானின் நாகசாகி நகரிலும் அணுகுண்டு வீசப்பட்டது. இதில் சுமார் 75 ஆயிரம் பேர் வரை இறந்தனர்.
மேலும் ஏராளமானவர் பாதிக்கப்பட்டனர். அதோடு அங்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளோடு பிறந்தன. இது பெரிய அழிவாக இன்று வரை பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் தான் அணுஆயுதங்களை பயன்படுத்த அனைத்து நாடுகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அமைதி, அகிம்சையை வலியுறுத்தி மகாத்மா காந்தியின் சிலையை அங்கு பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
மேலும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பிரதமர் மோடி இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தார். மேலும் ஜி 7 அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுதவிர சிட்னியில் நடத்த திட்டமிடப்பட்ட குவாட் மாநாடு நடக்காததால் ஹிரோஷிமாவில் நடத்த ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா நாட்டு தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதிலும் பல்வேறு விஷயங்கள் பற்றிய விவாதிக்கப்பட உள்ளது.
இந்த குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர், அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதையடுத்து மே 24ல் பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் சென்று இந்திய – பசிபிக் தீவு ஒத்துழைப்பு பேரவை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதன் மூலம் பப்புவா நியூ கினியாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார்.