சில தினங்களுக்கு முன் நடிகர் சரவணன் `தன் வீட்டின் கார் பார்க்கிங்கை ஆக்ரமித்துக் கடையைக் கட்டியிருக்கிறார்கள் சிலர்’ என அமைச்சர் தா.மோ.அன்பரசனைச் சந்தித்துப் புகார் ஒன்றை அளித்தார்.
அடுத்த நாளே அவருடைய முதல் மனைவி சூர்யாஶ்ரீ முதல்வர் தனிப்பிரிவில் சரவணன் தன்னை அடியாள் வைத்து மிரட்டுவதாக பதில் புகாரைத் தந்தார்.
என்ன நடந்தது? விசாரித்தோம்.
நடிகர் சரவணன் சென்னை குன்றத்தூர் பகுதியில் அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார். அந்த அபார்ட்மென்டில் சரவணனுக்கு இரண்டு ஃபிளாட்டுகள் உள்ளன. ஒரு ஃபிளாட்டில் சரவணனின் முதல் மனைவியும் இன்னொரு ஃபிளாட்டில் சரவணன் இரண்டாவது மனைவி மற்றும் மகனுடனும் வசித்து வருகிறார்கள்.
முதல் மனைவி சூர்யாஶ்ரீயை சரவணன் சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் படித்த போது காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
குழந்தை இல்லாததால் ஶ்ரீதேவி என்பவரை இரண்டாவதாக முதல் மனைவியின் சம்மதத்துடன் திருமணம் செய்ததாக சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு அளித்த பேட்டியின் போதுகூட குறிப்பிட்டிருந்தார் சரவணன்
குன்றத்தூர் ஃபிளாட்டை வாங்கியபோது முதல் மனைவியும் சில பல லட்சங்கள் கொடுத்ததாகவும், வீட்டை சரவணன் தன் பெயருக்கே வாங்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வீட்டின் கார் பார்க்கிங் ஏரியாவைத்தான் சரவணனுக்கு இந்த வீட்டை வாங்க உதவிய நபர் ஒருவர் ஆக்கிரமித்துக் கடை கட்டியுள்ளார் என்கிறார் சரவணன். அந்த நபரின் இந்தச் செயலுக்கு சரவணனின் முதல் மனைவி ஆதரவு என்பது சரவணனின் குற்றச்சாட்டு.
சரவணனிடமே இது தொடர்பாகப் பேசினோம்.
”கடை கட்டியிருக்கிற இடம் என்னுடைய கார் பார்க்கிங். மோசடியா பத்திரம் தயார் செய்து ஆக்கிரமிச்சுக் கடையைக் கட்டியிருக்காங்க. கடையை இன்னும் திறக்கலை. அதைத் திறக்கவும் விடமாட்டேன். அதுமட்டுமில்லாம சட்ட நடவடிக்கை எடுத்து அந்தக் கடையை இடிக்காம விட மாட்டேன்.
விகடன்லயே என்னுடைய குடும்பப் பேட்டி வந்திருக்கு. அதுல நாங்க மூணு பேர் என் பையன் சேர்ந்து நின்னு ஃபோட்டோல்லாம் எடுத்திருக்கீங்க. முதல் மனைவி சம்மதிச்சுதான் ரெண்டாவதா ஶ்ரீதேவியைக் கல்யாணம் செய்தேன்.
ஆனா இன்னைக்கு மீடியா முன்னாடி போய் அவ கூட தாலி கட்டாம குடும்பம் நடத்திட்டிருக்கேன்னு சொல்றாங்க. அதனால அவங்களை என்னுடைய முதல் மனைவின்னு கூட என்னால இப்பச் சொல்ல முடியலை. என்னைப் பொறுத்தவரை என்னுடைய முதல் மனைவி செத்துட்டதாகவே நினைச்சுக்கிடுறேன் என்றவர், இந்த விஷயத்துல கூடிய சீக்கிரமே எனக்குச் சாதகமா தீர்வு கிடைக்கும். அப்ப விரிவாப் பேசலாம்” என முடித்துக் கொண்டார்.