கோடை விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இலவச தரிசனத்துக்காகப் பல மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர். இதனால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசை நீண்டிருக்கிறது. இதன் காரணமாகவே தரிசன டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் திட்டத்தை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
சாமி தரிசனம் முடிக்கும் பக்தர்களுக்கு அடுத்த பிரதானம் திருப்பதி கோயிலின் பிரசாதமான லட்டு. அதை வாங்குவதற்கும் நீண்ட வரிசையில் கூட்டம் காத்திருக்கிறது. இந்த நிலையில்தான், தேவஸ்தான பறக்கும் படைக்கு, திருப்பதி லட்டுகள் திருடி விற்கப்படுவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே, தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் லட்டு விற்பனையைக் கண்காணித்திருக்கின்றனர். அப்போதுதான் திருடர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.
இது குறித்துப் பேசிய நிர்வாகி ஒருவர், “திருப்பதி லட்டு செய்யப்படும் இடத்திலிருந்து லட்டு, விற்பனை நிலையத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. அதன் பிறகே விற்பனை நடக்கிறது. இதில் லட்டை விற்பனை நிலையத்துக்குக் கொண்டுவரும் ஊழியர்களில் ஐந்து பேர், லட்டை கொண்டுவரும் வழியிலேயே திருடி அதிக விலைக்கு விற்றிருக்கின்றனர்.
விசாரணையின்போது இதுவரை 35,000 லட்டுகளைத் திருடி விற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அவர்களைத் திருப்பதி காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறோம். குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.