புதுடெல்லி,
ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருபவர்களில் ஒருவர் ஜெய்ஷ்வால். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார்.
தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார். அவரது சராசரி 48.08 ஆகும். ஸ்டிரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது. ஒரு சதமும், 5 அரைசதமும் எடுத்து உள்ளார். 82 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடித்து உள்ளார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் தேசிய அணியில் இடம் பெறாமல் ஒரு சீசனில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு ஜெய்ஸ்வால் சொந்தக்காரராகி உள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் மார்ஷ் 2008 ஐபிஎல் தொடரில் 616 ரன்களை குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
நடப்பு ஐ.பி.எல்.லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டு பிளஸ்சிசை தொடர்ந்து ஜெய்ஷ்வால் 2-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் அவரது ரன் குவிப்பு மேலும் அதிகமாகும்.
தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கவேண்டும் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.